×

அமைச்சரின் சர்ச்சை பேச்சால் மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணாமுல் - காங்கிரஸ் மோதல் : மம்தா எழுந்து சென்று சமாதானம்

கொல்கத்தா: மேற்க வங்க சட்டப்பேரவையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பற்றி போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்த சர்ச்சை கருத்தால் கடும் அமளி ஏற்பட்டது. அவையின் மையப் பகுதிக்கு வந்த இரு கட்சிகளின் எம்எல்ஏக்களையும், முதல்வர் மம்தா பானர்ஜி சமாதானம் செய்து அனுப்பினார். மேற்க வங்க சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, போக்குவரத்து துறையில் டிரைவர்கள், கண்டக்டர்களை நியமனம் செய்ததில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ பிரதிமா ரஜக் குற்றம் சாட்டினார். இதனால், போக்குவரத்து துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி கோபம் அடைந்தார். இவர், முர்சிதாபாத் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மேற்பார்வையாளராகவும் உள்ளார்.

குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளித்து பேசுகையில், ‘‘ஊழல் குற்றச்சாட்டை பிரதிமா ரஜக் நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். இன்னும் சில நாட்களில் முர்சிதாபாத்தில் மீதம் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும் திரிணாமுல் காங்கிரசில் சேர உ.ள்ளனர். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் முர்சிதாபாத்தில் எந்த காங்கிரஸ் எம்எல்ஏ.வும் வெற்றி பெற முடியாது,’’ என்றார் கோபமாக.
இதனால், கோபம் அடைந்த காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டு, அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு திரிணாமுல் எம்எல்ஏக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் நிலவியதால், முதல்வர் மம்தா பானர்ஜி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவையின் மையப் பகுதிக்கு சென்று காங்கிரஸ், திரிணாமுல் எம்எல்ஏ.க்களை சமாதானம் செய்து இருக்கைக்கு அனுப்பினார்.


Tags : clash ,Congress ,session ,West Bengal , Trinamool-Congress clash, West Bengal legislative session
× RELATED காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை...