×

கோவையில் கடத்தப்பட்ட கார் மூலம் பரமக்குடியில் மர்ம நபர்கள் ஊடுருவல்?

* தனியாக காரை நிறுத்தி விட்டு ‘எஸ்கேப்’
* செல்போன்கள், பாஸ்போர்ட்கள் பறிமுதல்

பரமக்குடி: கோவையில் கடத்தப்பட்ட கார் மூலம் பரமக்குடியில் மர்ம நபர்கள் ஊடுருவியதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், குனியமுத்தூரை சேர்ந்தவர் அருண்சங்கர்(30). இவரிடம் சொந்தமாக கார் உள்ளது. இதை கோவையை சேர்ந்தவரும் தனது நண்பருமான ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பாட்ஷாவுக்கு மாத வாடகைக்கு கொடுத்தார். ஒரு மாதம் ஒழுங்காக வாடகையை கொடுத்த பாட்ஷா அதன்பிறகு காருடன் மாயமானார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே, அருண்சங்கர் காரில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம்  கண்காணித்து வந்தார். கார் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதாக காண்பித்தது. இதையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்களுக்கு அருண்சங்கர் தகவல் கொடுத்தார். அவர்கள் காரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதிக்கு கார் வந்தது. அப்போது மற்ெறாரு காரில் பின்தொடர்ந்து வந்த அருண்சங்கரின் நண்பர்கள் காரை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் காரில் இருந்த நபர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்றனர். பின்னர், பரமக்குடி, பொன்னையாபுரம் பாலன் நகரில் காரை நிறுத்திய மர்ம நபர்கள், பூட்டி விட்டு ஓடி விட்டனர். சிறிது நேரத்தில், காரை அருண்சங்கரின் நண்பர்கள் சுற்றி வளைத்தனர். கார் பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. எனவே அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

காருடன் மர்ம நபர்கள் நீண்டநேரம் நிற்பதை பார்த்த மக்கள், பரமக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் அருண்சங்கரின் நண்பர்கள் விபரத்தை தெரிவித்தனர். சந்தேகமடைந்த போலீசார், காரின் கண்ணாடியை உடைத்து பார்த்தனர். உள்ளே 3 செல்போன்கள், 2 பாஸ்போர்ட்கள் இருந்தன. இந்த பாஸ்போர்ட் ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அப்துல்காசிம், தொண்டியை சேர்ந்த நைனா சித்திக் ஆகியோரது என தெரியவந்தது. இவர்கள் மீது ஏற்கனவே போலி பாஸ்போர்ட்கள் தயாரிப்பு, இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. எனவே அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பாட்ஷாவிடம் இருந்து இவர்களிடம் எப்படி கார் வந்தது? ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட காரை கடத்தினரா? வேறு யாரேனும் அவர்களுடன் வந்து பரமக்குடியில் ஊடுருவி உள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : persons ,Coimbatore , Intruder mysterious persons, car hijacked ,Coimbatore?
× RELATED திருவள்ளூரில் புதிதாக இன்று 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி