×

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு தராத கல்வி நிறுவனங்களுக்கான அரசின் உதவி தொகையை ரத்து செய்யக்கோரி வழக்கு

* தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்தாத அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கான நிதி உதவியை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 3 சதவீத இடஒதுக்கீடு 2017 ஏப்ரலில் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் கல்வி  நிறுவனங்கள் இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது இல்லை. இதையடுத்து, இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக் கோரி கண்பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் மற்றும் கண்பார்வையற்றவர்களுக்கான அகில இந்திய கூட்டமைப்பு சார்பில் மணிக்கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பள்ளி மற்றும்  கல்லூரி ஆசிரியர் பணிக்கு கண்பார்வையற்றவர்கள்  4 ஆயிரம் பேர் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கண்பார்வையற்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
காலி பின்னடைவு பணி இடங்களை மாற்றுத் திறனாளிக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றி நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களில்  மாற்றுத்திறனாளிக்களுக்கான இடஒதுக்கீட்டை பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மற்றும் ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று  கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக கல்வித் துறை 4 வாரங்களில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

Tags : cancellation ,institutions ,persons , Case for cancellation , government subsidy ,educational institutions
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...