×

பரங்கிமலையில் ராணுவ வீரர்களின் வீரதீர சாகச நிகழ்ச்சிகள்

சென்னை: பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பங்கேற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழா இன்று நடக்கிறது.பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற  204 ஆண், பெண் இளம் ராணுவ அதிகாரிகளின்  பயிற்சி   இன்றுடன் முடிவடைகிறது. இதனை  முன்னிட்டு, ராணுவ வீரர்களின் வீர, தீர சாகச நிகழ்ச்சிகள் நேற்று காலை ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ராணுவ வீரர்கள் குதிரைகள் மீது சவாரி செய்தவாறே, கொடி ஏற்றுதல், தடைகளை தாண்டுதல், நெருப்பு வளையத்துக்குள் புகுந்து வருதல் போன்ற சாகசங்களில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிளில் மனித பிரமிடுகள் அமைத்தும், பற்றி எரியும்  தீவளையப் பாதையில் நுழைந்து மோட்டார் சைக்கிளை செலுத்தினர். பெங்களூரில் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 4 பாராசூட்டுகளில் மைதானத்தின் மேல் பறந்தபடி தேசியகொடி மற்றும்  ஒடிஏ கொடியினை அசைத்தபடி சாகசம் செய்ததனர்.

பஞ்சாப் மாநில கட்கா எனப்படும் பாரம்பரிய வீரவிளையாட்டான கத்தி சண்டைகளை இசைக்கேற்ப ஆவேசத்துடன் மோதிக்கொண்டது, தலையில் தேங்காய் உடைப்பது, வயிற்று பகுதியில் டியூப் லைட்டுகளை உடைப்பது, நெருப்பு வட்டத்துக்குள் கும்பலாக சேர்ந்து சண்டையிட்ட காட்சிகள் பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. முன்னதாக  ராணுவ அதிகாரிகள் பயிற்சி மைய தலைவர் சஞ்சீவ் கனல் ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ராணுவ அதிகாரிகள், ராணுவ குடும்பத்தை சேர்ந்தவர்கள்  பலரும் கலந்து கொண்டு சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைமை அதிகாரி அருண்,  நிருபர்களிடம் கூறுகையில், “இங்கு 21 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் உள்பட 204 பேர் 46 வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சியின் போது உடல் வளம், மனவளம் பயிற்சியுடன்  சர்வதேச ராணுவ பயிற்சி, புவியியல் சார்ந்த  அறிவு திறன் வரைபடங்களை  கையாளுதல், நவீன  ஆயுத  பயிற்சி போன்றவைகள்  வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி முடித்தவர்கள் இந்தியாவின் எந்த  பகுதிகளிலும் பணியாற்றக் கூடியவர்களாக இருப்பார்கள்” என்றார்.

Tags : personnel ,Army ,Paranagamalai , Heroic adventure activities, Army personnel ,Paranagamalai
× RELATED சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 29 நக்சல்கள் சுட்டுக்கொலை..!!