×

கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்துக்கு வாடகை செலுத்தாத கடைகள் அகற்றம்: நீதிமன்ற உத்தரவால் அதிரடி

சென்னை: நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கபாலீஸ்வரர் கோயில் கட்டிடத்துக்கு வாடகை செலுத்தாத கடைகள் நேற்று அகற்றப்பட்டன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான,  நான்கு இடங்கள் முறையே 200 சதுர அடி பரப்பளவுள்ள கடை, 64 சதுர அடி பரப்பளவுள்ள கடை, 195 சதுரஅடி பரப்பளவுள்ள கடை மற்றும் 305 சதுரஅடி பரப்பளவுள்ள குடியிருப்பு ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன்கீழ் வாடகை நிலுவைகளை செலுத்தவில்லை.  எனவே, கோயில் நிர்வாகம் சார்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வாடகை நிலுவைகளை செலுத்தாததால் வெளியேற்ற உத்தரவு பிறக்கப்பட்டது.

இதனை எதிர்த்து வாடகைதாரர்கள் ஆணையர் நீதிமன்றத்தில் நான்கு மேல் முறையீடு வழக்குகளை தாக்கல் செய்தனர்.  அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நேற்று ஆணையர் நீதிமன்ற மேல்முறையீடு உத்தரவின்படி வெளியேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு இருந்த கடைகள் மற்றும் வீடு பூட்டி சீலிடப்பட்டன. இந்த ஆக்கிரமிப்புதாரர்கள் நிலுவைத் தொகையாக தலா 17,07,979, 5,39,117, 15,68,799,  3,60,525 வைத்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்புதாரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக வாடகை நிலுவைகளை செலுத்துவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுத்து அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : administration ,Kapaleeswarar temple , Kapaleeswarar Temple Administration, Rental, Removal of Stores, Court
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...