×

ஆற்காடு இளவரசருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரம்பூரைச் சேர்ந்த குமாரவேலு, தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்,  ஆற்காடு நவாப்புக்கு  ஆற்காடு இளவரசர் என பட்டமும், பல்வேறு சலுகைகளும்  இங்கிலாந்து அரசால் வழங்கப்பட்டது. கடந்த 2005 முதல்  2016 வரை ஆற்காடு இளவரசர் வசிக்கும் அமீர் மஹாலுக்கு ரூ.2 கோடியே 74 லட்சம் மத்திய பொதுப்பணித்துறை செலவிட்டுள்ளது. இந்தியா ஜனநாயக குடியரசாக மாறிய நிலையில், ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தையும், அவருக்கான சலுகைகளையும் திரும்ப பெறுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வழங்கப்பட்ட இளவரசர் பட்டம், அவரது பரம்பரைக்கும் தொடரும். சுதந்திரத்துக்குப் பிறகு ஆற்காடு இளவரசர் வசித்து வரும் அமீர் மஹால் மத்திய அரசு கட்டுப்பாட்டுக்கு வந்தது. எனவே, அதை மத்திய அரசு பராமரித்து வருகிறது என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஆற்காடு இளவரசர் பட்டத்தை மத்திய அரசே அங்கீகரித்துள்ளது. அவருக்கு ஆற்காடு இளவரசர் என்ற பட்டத்தை வழங்கியும், அரசியல் ஓய்வூதியம் வழங்கியும் பிறப்பித்த நிர்வாக உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Prince ,Arcot , Prince of Arcot, dismissed case
× RELATED ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சிபிஐ ரெய்டு