×

20 ஆயிரம் கந்து வட்டி கடனுக்காக பூ விற்கும் பெண் அடித்துக் கொலை? தாய், 2 மகன்களுக்கு வலை

வேளச்சேரி: சென்னை பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பூபதி (52). கொத்தனார். இவருக்கு லட்சுமி (48) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். லட்சுமி பள்ளிக்கரணையில் சாலையோரம் பூ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் வளர்ச்சிக்கு லட்சுமி தனது வீட்டின் அருகில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் லட்சுமி என்பவரிடம் கடந்த 6 மாதங்களுக்கு முன் ₹20 ஆயிரம் கடன் வாங்கினார். வாங்கிய கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கொடுத்தும் வந்துள்ளார். பூக்களின் விலை உயர்வால் வியாபாரம் சொல்லும்படி இல்லை. இதனால் லட்சுமி கடந்த 2 மாதங்களாக வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் கொடுத்த லட்சுமி தனது மகன்கள் பிரசாந்த், சாய் பிரசாத், ரகு  ஆகியோர் மூலம்  பலமுறை பணம் கேட்டு, லட்சுமியை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை லட்சுமி வீட்டின் அருகே பூ வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது பிரசாந்த் தனது சகோதரர்களுடன் வந்து 2 மாத வட்டியான ₹2 ஆயிரம் பணம் கேட்டு  தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, ‘‘வியாபாரம் சரியாக இல்லாததால் வட்டியை கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் வட்டியும் முதலுமாக பணத்தை கொடுத்து விடுகிறேன்’’ என்று கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பிரசாந்த் மற்றும் அவரது சகோதரர்கள் சேர்ந்து லட்சுமியை பொதுமக்கள் முன்னிலையில் ஆபாசமாக திட்டியுள்ளனர். இதனால் மனம் உடைந்த லட்சுமி, ‘‘₹20 ஆயிரம் கடனுக்காக இப்படி பேசலாமா?’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் பூக்கூடையை சாலையிலேயே தள்ளிவிட்டு லட்சுமியை தாக்கியுள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத பிரசாந்த் அருகில் இருந்த மண்ணாலான விநாயகர் சிலையை எடுத்து லட்சுமியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். அந்த சிலை காய்ந்த நிலையில் இருந்ததால் லட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  ரத்தம் கொட்டியது. பின்னர் ரத்த வெள்ளத்தில் லட்சுமி மயங்கி விழுந்தார். இதை பார்த்த பிரசாந்த் தனது சகோதரர்களுடன் தப்பி ஓடிவிட்டார்.சுயநினைவின்றி கிடந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டிருந்தால் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே லட்சுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர். அதில் பலமாக தாக்கியதில் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு லட்சுமி இறந்தது தெரிந்தது. இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிரசாந்த்தை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் கந்து வட்டிக்கு பணம் கொடுத்த லட்சுமி, சாய் பிரசாத், ரகு ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Tags : sons , Bond interest loan, female slaughter, mother, 2 sons
× RELATED சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்...