×

எண்ணூரில் பல மணி நேரம் மின்தடை பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னகுப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர் போன்ற பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. ஆனால், இரவு 9.30 மணி வரை மின் விநியோகம் செய்யப்படாததால், மேற்கண்ட பகுதி மக்கள் தூக்கமின்றி தவித்தனர். மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.  இரவு 10 மணி ஆகியும் மின்சாரம் வராததால், இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திரண்டு, அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த 2 நாட்களாக பல மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம், என மக்கள் கூறினர். இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய அதிகாரிகள், உயரழுத்த மின்வயர் மற்றும் பில்லரில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டது. அதை விரைந்து சரி செய்கிறோம், என்றனர். அதன்படி, சரி செய்ததை தொடர்ந்து, அப்பகுதிக்கு மின்சாரம் சப்ளை செய்யப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ennore, Resistance, Public Road Pickup, Transport
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...