×

காஷ்மீர், ராமர் கோயில் விவகாரம் ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் விவாதிக்க முடிவு: இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது

புஷ்கர்: ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடக்க உள்ளது. இதில், காஷ்மீர் நிலவரம், ராமர் கோயில் விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் இன்று தொடங்குகிறது. 3 நாட்கள் நடக்கும் இக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்.சின் துணை அமைப்புகளான பாஜ உள்ளிட்ட 35 அமைப்புகளின் 200 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமை வகிக்கிறார். பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்ள உள்ளார். இக்கூட்டத்தில் காஷ்மீர் நிலவரம், ராமர் கோயில், பொருளாதார நிலை, நாட்டின் பாதுகாப்பு, எல்லையின் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

எல்லை பகுதிகளில் செயல்படும் ஆர்எஸ்எஸ்சின் துணை அமைப்பான சீமா ஜக்ரன், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்தும், அம்மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும் விளக்கம் அளிக்க உள்ளது. இதேபோல், பாரதிய மஸ்தூர் சங்கம், ஸ்வதேசி ஜக்ரன் மஞ்ச் ஆகியவை பொருளாதார மந்த நிலை குறித்து விளக்கம் அளிக்க உள்ளன. தினசரி அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் ராமர் கோயில் வழக்கு தொடர்பாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பாஜ பெரும்பான்மை வெற்றி பெற்ற பிறகு நடக்கும் ஆர்எஸ்எஸ்சின் முதல் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kashmir ,Rama Temple ,RSS Coordination Meeting , Kashmir, Rama Temple, RSS
× RELATED காஷ்மீரில் கடும் எதிர்ப்பால் பொது...