×

போக்குவரத்து போலீசுக்கு எதிர்ப்பு குடித்ததற்கு 11,000 அபராதமா? பைக்கை எரித்த உரிமையாளர்: நடுரோட்டில் பரபரப்பு சம்பவம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 11,000 அபராதம் விதித்த ஆத்திரத்தில்,  பைக்குக்கு அதன் உரிமையாளரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை விபத்துகளை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும்,  சாலை விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் புதிய சட்டம் இம்மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி அதிகளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று நேற்று முன்தினம் ஷேக் சராய்  பகுதியில் போலீசார் விதிமீறல்களை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக  பைக்கில் வந்த சர்வோதயா என்கிளேவ் பகுதியில் வசிக்கும் ராகேஷ் என்பவர் குடிபோதையில் ஓட்டி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். ராகேஷிடம்  11,000 அபராதம் கட்ட கூறி சலானையும் கொடுத்தனர்.  

வாகனத்துக்கான ஆவணங்களை எடுப்பதாக கூறிய ராகேஷ் ஆத்திரத்தில் பைக்குக்கு தீ வைத்தார். இது குறித்து கூடுதல் காவல் ஆணையர் (தெற்கு) பர்வேந்தர் சிங் கூறியதாவது: ‘‘இந்த சம்பவம் தில்லி சிராக் பகுதியில் திரிவேணி வளாகம் அருகே  நிகழ்ந்தது. பைக்கில் வந்தவர் மது அருந்தியது தெரியவந்தது. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் மதுபானத்தின் அளவு 200 மில்லி கிராம் ஆக இருந்தது. நார்மல் அளவு 100 மில்லி லிட்டரில் 30 மில்லி கிராம் ஆக இருக்க வேண்டும்.  ஆவணங்களை காட்ட கூறிய போது அதை   ராகேஷ் மறுத்து,  அபராதத்தை நீதிமன்றத்தில் கட்டி விடுகிறேன் என கூறி குடிபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். அவரிடம் 11,000 வரை அபராதம் விதிக்க முடியும் என்பதுடன் வாகனத்தை பறிமுதல் செய்ய முடியும் என போலீசார் கூறியுள்ளனர். புதிய சட்டம் குறித்தும் விளக்கி உள்ளனர்.  பைக்கின் சாவியை கொடுத்து விட்டு தள்ளி நிற்குமாறு கூறியுள்ளனர்.

சற்று நேரம் யோசித்து விட்டு, ஆவணங்களை தருவதாக கூறிய ராகேஷ், திடீரென பெட்ரோல் குழாய் திறந்து  தீ வைத்தார். நிமிடத்தில் பைக் தீப்பிடித்து எரிந்தது. அந்த இடத்தை விட்டு தப்பியோட முயன்ற ராகேஷை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.  தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.  ராகேஷ் மீது எரிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்படும்.’’ இவ்வாறு அவர் கூறினார். போலீசாரின் விசாரணையின் போது, நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு திரும்பி ெகாண்டிருந்த போதுதான் வாகன சோனையில் சிக்கியதாக ராகேஷ் தெரிவித்தார்.


Tags : Owner ,incident , Traffic Police, Proprietor, Capital Delhi
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...