×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் பைனலில் பியான்கா-செரீனா

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) - பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) மோதுகின்றனர்.அரை இறுதியில் எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன், 5வது ரேங்க்) மோதிய செரீனா அதிரடியாக 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த அவர், ஸ்விடோலினாவின் சர்வீஸ் ஆட்டங்களை மிக எளிதாக முறியடித்து புள்ளிகளைக் குவித்தார். செரீனாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ஸ்விடோலினா எதிர்ப்பின்றி சரணடைந்தார். 1 மணி, 10 நிமிடம் மட்டுமே நீடித்த இப்போட்டியில் செரீனா 6-3, 6-1 என்ற நேர் செட்களில் வென்று 10வது முறையாக யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறினார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனையாளராக விளங்கும் செரீனா (37 வயது), யுஎஸ் ஓபனில் 6 முறை கோப்பையை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதியில் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு (15வது ரேங்க்), சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை (22 வயது, 13வது ரேங்க்) எதிர்கொண்டார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், பியான்கா 7-6 (7-3), 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 2 மணி, 13 நிமிடத்துக்கு நீடித்தது. இந்த வெற்றியின் மூலமாக, யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறிய முதல் கனடா வீராங்கனை என்ற பெருமையும் பியான்காவுக்கு கிடைத்துள்ளது. இறுதிப் போட்டியில் செரீனா - பியான்கா மோத உள்ளது டென்னிஸ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Bianca-Serena ,US Open Tennis Final , US Open Tennis, Bianca, Serena
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...