×

நீண்ட காலம் ஆட்சியில் இருந்த ஜிம்பாப்வே மாஜி அதிபர் முகாபே மரணம்

ஹராரே: ஜிம்பாப்வே நாட்டில் நீண்ட காலமாக ஆட்சி செய்தவர் என்ற பெருமையை பெற்ற, முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே உயிரிழந்தார். அவருக்கு வயது 95. ராபர்ட் முகாபே கடந்த 1980ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை  ஜிம்பாப்வே நாட்டின் பிரதமராக இருந்தார். பின்னர், அவர் தொடர்ந்து அதிபராக பதவியை வகித்து வந்தார். 30 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்த அவர், கடந்த 2017ம் ஆண்டு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை தொடர்ந்து, கட்டாயத்தின் பேரில் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் உடல் நலக்குறைவு அடைந்தர். இதற்காக, சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி  ராபர்ட் முகாபே  நேற்று இறந்தார். அவருக்கு வயது 95.

இது பற்றி ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘ஜிம்பாப்வே நாட்டின் நிறுவன தந்தை மற்றும் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே இறந்து விட்டார் என்பதை மிகுந்த வேதனையோடு அறிவிக்கிறேன். அவர் விடுதலையின் சின்னமாக விளங்கினார். மக்களின் விடுதலை மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். நாட்டின் வரலாற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது,’ என்று கூறியுள்ளார்.  தனது ஆட்சிக் காலத்தில் முகாபே தனது அரசியல் எதிர்ப்பாளர்களை அடக்கி ஒடுக்கினார். அவருடைய தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக, அவருக்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவம் அவருக்கு எதிராக திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது

Tags : Death ,Mugabe ,Zimbabwean Maj , Zimbabwe, Maj. President Mugabe, death
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...