×

பாகிஸ்தானின் ‘கழுத்து ரத்தக் குழாய்’ காஷ்மீர்: பிரதமர் இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: ‘‘பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மாநிலம் கழுத்தில் உள்ள ரத்தக்குழாயை போன்றது,’’ என இந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை துண்டித்துக் கொண்டது. மேலும், தூதரக ரீதியாக ஐநா மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு செல்ல முயற்சித்து வருகிறது.இந்நிலையில், 1965ல் நடந்த இந்தியாவுக்கு எதிரான போரின் ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் செப்டம்பர் 6ம் தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக பாகிஸ்தான் அனுசரித்து வருகிறது. தியாகிகள் தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், தனது உரையில் கூறியிருப்பதாவது:

ஒரு மனிதனின் இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்து ரத்தக் குழாய் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தான் பாகிஸ்தானின் கழுத்து ரத்தக் குழாயாக காஷ்மீர் மாநிலம் இருக்கிறது. அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே கருதுகிறோம். எனவே, இந்தியாவின் அணு ஆயுத குவிப்பை சர்வதேச சமூகம் தீவிரமாக கவனிக்க வேண்டும். தவறினால், அதனால் ஏற்படும் பேரழிவுக்கு உலக சமூகமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஒருபோதும் பாகிஸ்தான் போரை தொடங்காது என ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம். அதேசமயம், எங்களின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் சவால் விடுக்கப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதையும் மறக்கக் கூடாது.  இவ்வாறு அவர் கூறினார். இதேபோல், அந்நாட்டின் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வா கூறுகையில், ‘‘பாகிஸ்தானை முழுமையடைச் செய்யும், பூர்த்தி செய்யப்படாத அம்சமே காஷ்மீர். ஐநா தீர்மானத்தின் மூலம் மட்டுமே அதை பூர்த்தி செய்ய முடியும்,’’ என்றார்.

முத்தலாக் தடை சட்டம்?
இந்தியாவில் முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானிலும் முத்தலாக்குக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உடனடி முத்தலாக் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கக் கோரி சட்டம் இயற்ற இஸ்லாமிய சித்தாந்த அமைப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சட்டத்துறை நிலைக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது.  இது குறித்து சட்ட அமைச்சர் பரோக் நசீம் கூறுகையில், ‘‘இஸ்லாமிய வரலாற்றின் படி, முந்தைய காலங்களில் உடனடி தலாக்குக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்’’ என ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Tags : Imran Khan ,speech ,Pakistan , Pakistan, Kashmir and Prime Minister Imran Khan
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு