×

கீழ்மலை கிராம மக்களை மிரட்டும் யானைக்கூட்டம்

*கொடைக்கானலில் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பீதி


கொடைக்கானல் : கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் பீதியடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பேத்துப்பாறை, அஞ்சுவீடு, பிஎல் செட், வடகவுஞ்சி, அஞ்சுரான் மந்தை உள்ளிட்ட பகுதிகளில், கடந்த ஒன்றரை மாதமாக யானைகள் முகாமிட்டு விளைநிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் லட்சக்கணக்கில் நஷ்டமடைந்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கொடைக்கானல் - பழநி பிரதான சாலையில், வெள்ளைப்பாறை அருகே யானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே, சாலைகளில் உலாவும் யானைகளை வனத்திற்குள் விரட்ட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை ரேஞ்சர் ஆனந்தகுமார் கூறுகையில், ‘‘கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். யானைகள் நடமாடும் பகுதியில் மூலிகை கலவைகளை கயிறுகளில் தடவி கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் வருகை ஓரளவிற்கு குறைந்துள்ளது. இருப்பினும் யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்’’ என்றார்.


Tags : Kodaikanal ,Elephants ,roaming ,roads
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...