×

காதலனுக்கு 21 வயதான பிறகே திருமணம் கல்லூரி மாணவி விடுதியில் தங்கி படிப்பை தொடரலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பதினெட்டு வயதான கல்லூரி மாணவியும், 19 வயதான டிரைவரும் காதலித்த விவகாரத்தில், காதலனுக்கு 21 வயதான பிறகே திருமணம் செய்ய முடியும். எனவே மாணவி 2 ஆண்டுகள் விடுதியில் தங்கி படிப்பை தொடரலாம் என  ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.நெல்லை, ராதாபுரத்தைச் சேர்ந்த குமார், மாயமான தனது மகளை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்  வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகள் தற்போது 18 வயதை அடைந்துள்ளதாகவும், திருமணத்திற்கு முன்பாக அவரது பட்டப்படிப்பை முடிக்கவேண்டும் என அவரது தந்தை கூறியுள்ளார். அதே நேரம் அந்தப் ெபண்ணோ, தான் ஒருவரை காதலிப்பதாகவும்,  படிப்பை தொடருவதாகவும், தந்தையுடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். அந்தப் பெண்ணை காதலிக்கும் நபரோ, தங்களது காதல் திருமணத்திற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், காதலியை தொடர்ந்து  படிக்க வைப்பதாகவும் கூறியுள்ளார்.

அதே நேரம், அந்த பெண் விடுதியிலிருந்து படி ப்பை தொடர்வதாகவும், படிப்பு முடிந்த இரண்டு ஆண்டுக்கு பிறகே திருமணம் குறித்த முடிவெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட பெண் 18 வயது நிரம்பியவர். எனவே, அவரது  முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால் டிரைவரான அவரது காதலனுக்கோ 19 வயது. சட்டப்படி 21 வயதில் தான் திருமணம் செய்ய முடியும். எனவே, மனுதாரரின் மகள் 2 ஆண்டுகள் விடுதியில் தங்கி கல்லூரி படிப்பை முடிக்க  வேண்டும். அதன் பிறகு இருவரும் திருமணம் குறித்த முடிவெடுக்கலாம். மனுதாரரின் விருப்பத்தையும் கேட்கலாம். இவ்வாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.


Tags : Married ,college student ,cafeteria,ICT Branch ,Directive
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நாளை...