×

நேரடி நெல் விதைப்பு தீவிரமான நிலையில் உழவு மானியமும் இல்லை... காவிரி நீரும் வந்து சேரவில்லை...

நாகை: நாகை மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால் உழவு மானியம் கிடைக்கவில்லை, மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் வந்து சேராததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு பணிகளை தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடைமடை பகுதிகளான சீயாத்தமங்கை, தென்பிடாகை, சேஷமூலை, திட்டச்சேரி, திருமருகல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் நிலங்களை டிராக்டர் மூலம் உழுது சமப்படுத்தி நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளனர். நீண்ட கால நெல் ரகங்களை விதைத்து வருகின்றனர். ஆனால் இதுநாள் வரை உழவு மானியம், மானிய விலையில் விதை நெல் ஆகியவை வழங்கப்படவில்லை. இது ஒருபுறம் இருந்தாலும் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 20 நாட்களை கடந்தும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: பிரபாகரன் (மாவட்ட வேளாண் விற்பனைக்குழு உறுப்பினர்): நாகை மாவட்டத்தில் காலதாமதமாக குடிமராமத்து மற்றும் தூர் வாரும் பணிகள் தொடங்கியதால் கடைமடை பகுதிக்கு இன்னும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரவில்லை. அதேநேரத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை தொடங்கியுள்ளோம். ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. ஆனால் தமிழக அரசு சம்பா சிறப்பு திட்டத்தின் கீழ் நேரடி விதைப்புக்கு உழவு மானியமாக வெறும் ரூ.600 மட்டுமே அறிவித்துள்ளது வேதனை தருகிறது. அரசு அறிவித்துள்ள தொகை மிகவும் குறைவாக இருந்தாலும் அதுவும் கிடைப்பது இல்லை. உழவு மானியம் பெறுவதற்காக விஏஓவிடம் சிட்டா அடங்கல் பெறுவதற்கு பல மணி நேரம் காத்து இருக்க வேண்டியது உள்ளது. சிறிய விவசாயிகளுக்கு உழவு மானியம் கிடைப்பது மிகவும் அரிது. அதே நேரத்தில் 50 சதவீத மானியத்தில் நெல் விதைகள் கிடைப்பதுமில்லை. தனியார் வசம் உள்ளே விதைகளை வாங்க வேண்டியது உள்ளது. ஒருபுறம் தண்ணீர் வரவில்லை. மற்றொரு புறம் உழவு மானியம் இல்லை. மானிய விலையில் விதை நெல் கிடைப்பது இல்லை. இப்படி எல்லா பக்கமும் விவசாயிகள் வேதனைபடுகின்றனர்.

கோபிகணேசன் (காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர்): நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் இன்னும் குடிமராமத்து பணிகள் நிறைவுபெறவில்லை. இதனால் வெண்ணாறு கோட்ட பகுதியில் பாசனத்திற்கு தண்ணீர் வரவில்லை. நீண்டகால மற்றும் மத்திய கால பயிர் ரகங்களான ஏடிடி 38, சிஆர் 1009 ஆகிய நெல் ரகங்கள் இந்த பகுதிக்கு ஏற்றது. குறைவான செலவில் அதிக மகசூல் தரும். ஆனால் இந்த நெல் ரகங்கள் 20 ஆண்டுகளை கடந்து விட்டது என்று அரசு கூறி விவசாயிகள் சாகுபடி செய்ய தடை விதித்துள்ளது. இந்த நெல் ரகங்களை சாகுபடி செய்தால் உழவு மானியம் இல்லை. மானிய விலையில் இந்த நெல் ரகங்களை அரசு தருவதும் இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு நெல் ரகங்கள் ஏற்றதாக இருக்கும். விவசாயிகள் எந்த நெல் ரகங்களை விரும்புகின்றார்களோ, அதை சாகுபடி செய்ய அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகள் வசதிக்கு ஏற்ப அரசு மானியம் வழங்க வேண்டும். ஆனால் விவசாயிகளின் கருத்தை காதில் போட்டுக்கொள்ளாமல் தங்களது இஷ்டத்திற்கு இந்த நெல் ரகங்களை பயன்படுத்துங்கள். அப்பொழுது தான் மானியம் என்று கூறுகிறது. தடை செய்யப்பட்ட நெல் ரகங்களுக்கு மாற்றாக மற்றொரு நெல் ரகங்களை கண்டுபிடிக்கவும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா விவசாயிகள் நலன் கருதி சம்பா தொகுப்பு திட்டம் அறிவித்தார். ஆனால் அவர் வழியில் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி விவசாயிகள் நலனின் அக்கரை கொள்வதே இல்லை.

பாலையூர் தமிழ்செல்வன்(கடைமடை விவசாயி): நேரடி நெல் விதைப்புக்கு உழவு மானியமாக ஏக்கருக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. இது போதுமானது இல்லை. இந்த மானியத்தை பெறுவதற்கு விஏஓவை பார்த்து சிட்டா அடங்கல் வாங்க வேண்டும். விவசாய நிலத்தில் டிராக்டரை வைத்து போட்டோ எடுக்க வேண்டும். இதை எல்லாம் செய்து முடிக்க குறைந்தது ஒரு நாள் ஆகிவிடும். ஒருநாளைக்கு கூலி வேலைக்கு சென்றாலே ரூ.400 வரை சம்பளம் பெற முடியும். இதை எல்லாம் செய்து முடித்தால் உழவு மானியம் சம்பந்தப்பட்ட விவசாயின் வங்கி கணக்கில் தான் வரவு வைப்பார்கள். இது ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பாகும். ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளை பாதுகாக்க அரசு நினைத்தால் சாகுபடி செய்யும் விவசாயின் வங்கி கணக்கில் ரூ.15 ஆயிரம் வரவு வைக்க வேண்டும். அப்பொழுது தான் இழப்பீட்டை ஓரளவு தாக்கு பிடிக்க முடியும்.

இது குறித்து வேளாண் இணை இயக்குநர் நாராயணசாமி கூறியதாவது: நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்ய 1 லட்சத்து 25 ஆயிரத்து 800 எக்டேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 7878 எக்டேர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 562 எக்டேரில் நாற்றாங்கால் விடப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான சிஆர்1000, சுவர்ணசம்பா, டிகேஎம்13, டிஆர்ஓய்3, ஏடிடி 46 போன்ற நெல் ரகங்கள் 715 மெட்ரிக் டன் அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் உள்ளது. தேவையான அளவிற்கு உரங்கள் கையிருப்பு உள்ளது என்றார்.

Tags : Direct Paddy Sowing
× RELATED வீடியோ காலில் ஆபாசங்களை காட்டி...