×

கம்பெனிகளுக்கான பதிவேட்டில் இருந்து 2.5 லட்சம் நிறுவனங்களை நீக்கியது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: நிர்மலா சீதாராமனுக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

சென்னை: இரண்டரை லட்சம் நிறுவனங்களை கம்பெனிகளுக்கான பதிவேட்டில் இருந்து நீக்கியது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று டி.கே.ரங்கராஜன் எம்பி, நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:இந்திய கம்பெனிகள் சட்டத்தின் 248(5) பிரிவின் கீழ் ஒரே அடியில் இரண்டரை லட்சம் நிறுவனங்களை கம்பெனிகளுக்கான பதிவேட்டில் இருந்து நீக்கிய கம்பெனிகளுக்கான பதிவாளரின் சமீபத்திய நடவடிக்கை குறித்து உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இந்த சட்டத்தின் 248(6)வது பிரிவு மிகத் தெளிவாகவே குறிப்பிடுகிறது.

“இந்த துணைப்பிரிவு (5)ன் கீழ் ஓர் உத்தரவை பிறப்பிப்பதற்கு முன்பாக பதிவாளர் அந்த நிறுவனத்திற்கு வந்து சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் பெறுவதற்கும் அந்த நிறுவனத்தின் கடன்கள் மற்றும் இதர பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதற்கான தொகை ஆகியவற்றுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு இருக்கும் நிலையில் ஒரேயடியாக இரண்டரை லட்சம் நிறுவனங்களை  பட்டியலில் இருந்து அவசர அவசரமாக நீக்கியுள்ள பதிவாளரின் செயல், அந்த நிறுவனங்களுக்கு வந்து சேரவேண்டிய தொகை மற்றும் அதன் கடன்களையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கான தொகை ஆகிய ஏற்பாடுகள் குறித்து அவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற 248(6)வது பிரிவிற்கு உகந்த வகையில் நடந்து கொள்ளவில்லை.

இதன் விளைவுகள் படுமோசமானதாக உள்ளன. திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள், தீர்க்க வேண்டிய பொறுப்புகள் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் இந்த நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இது மிக அதிகமான செலவு மற்றும் காலத்தை கோரும்படியான ஒரு செயலாகும்.இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய வரிகளை எவ்வாறு வசூலிக்க முடியும். அரசு நிர்வாகிகள் அதிக நேரத்தை செலவு செய்வதில் ஈடுபட வேண்டியிருக்கும் என்பதோடு, அரசின் கருவூலத்திற்கு மிகப்பெரும் இழப்பையும் இது ஏற்படுத்தாதா, இந்த நிறுவனங்களிடமிருந்து வரவேண்டிய ஜிஎஸ்டியின் நிலை என்னவாக இருக்கும்?இத்தகைய நிறுவனங்களை பட்டியலில் இருந்து நீக்குவதன் மூலம் தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்கள் சட்டத்தின்  பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ள இது உதவாதா, தவறான செயல்களில் ஈடுபட்ட இயக்குநர்களின் மீது அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது?இந்த நடவடிக்கையின் பின்விளைவுகளை சமாளிக்க உங்கள் அமைச்சகம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் ஒரு புறத்தில் இந்த நிறுவனங்களிடமிருந்து பெறப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை அதிகாரிகள் பெற முடியும் என்பதோடு தவறாகச் செயல்பட்ட இயக்குநர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அனுமதிக்காமல் இருக்கவும் முடியும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Letter , Nirmala Sitharaman, DK Rangarajan
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...