×

வெஸ்ட்இண்டீசை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி... டோனியை முந்தினார் விராட்கோலி

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டி 20, ஒருநாள், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் வெற்றி பெற்று வெஸ்ட்இண்டீசை ஒயிட்வாஷ் செய்துள்ளது இந்திய அணி. ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது.

ஹனுமா விஹாரி 111, அகர்வால் 55, கேப்டன் கோஹ்லி 76, இஷாந்த் ஷர்மா 57 ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜஸ்பிரித் பூம்ராவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்னுக்கு சுருண்டது. பூம்ரா 6, ஷமி 2, இஷாந்த், ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 299 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ராகுல் 6, அகர்வால் 4 ரன்னில் வெளியேற, கோஹ்லி டக் அவுட்டானார். புஜாரா 27 ரன் எடுத்தார்.

ரகானே 64 ரன் (109 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), விஹாரி 53 ரன்னுடன் (76 பந்து, 8 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் கெமர் ரோச் 3, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 468 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 45 ரன் எடுத்திருந்தது.

தொடக்க வீரர்கள் பிராத்வெய்ட் 3 ரன், கேம்ப்பெல் 16 ரன்னில் வெளியேறினர். டேரன் பிராவோ 18, ஷமர் புரூக்ஸ் 4 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பிராவோ 23 ரன் எடுத்த நிலையில் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார் (ரிடயர்டு ஹர்ட்). வெஸ்ட் இண்டீஸ் அணி 59.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்குள் சுருண்டது.

இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், இஷாந்த் 2, பும்ரா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றுள்ளது. ஐசிசி உலக  டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 28-வது வெற்றியை விராட் கோலி பதிவு செய்துள்ளார்.

விராட்கோலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் 26 டெஸ்டில் விளையாடி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு கேப்டன் கங்குலி தலைமையில் இந்திய அணி வெளிநாட்டில் 28 டெஸ்டில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. அத்துடன் ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள இந்திய கேப்டன் டோனியின் (60 டெஸ்டில் 27 வெற்றி) சாதனையை விராட்கோலி (48 டெஸ்டில் 28 வெற்றி) பெற்று சாதனை படைத்துள்ளார்.


Tags : India, West Indies, Test cricket, Indian cricket team, Virat Kohli, Dhoni, India win,
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்