×

திருவாரூர் அருகே பட்டீஸ்வரத்தில் குளத்தை தூர்வாரும் போது 2 ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே குளத்தை தூர்வாரும் போது 2 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. சிலைகளுக்கு மாலை அணித்து பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர். திருவாரூரை அடுத்த மணக்கால் கிராமம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள குளம்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையினர் மூலம்  தூர் வாரப்பட்டு வருகிறது. நேற்று  பொக்லைன் இயந்திரம் மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெற்ற போது சுமார் 5அடி ஆழத்தில் ஐம்பொன் சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து  பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். பின்னர் அந்த சிலைகள் பாதுகாப்பாக தோண்டி எடுக்கப்பட்டது. தலா 2 அடி உயரம் கொண்ட ஒரே பீடத்திலான சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் சிலை என்பது தெரியவந்தது. 80 கிலோ எடை கொண்ட இந்த ஐம்பொன் சிலை, அங்குள்ள  சேஷபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது.

கடந்த 50 வருடங்களுக்கு முன் இந்த 2 சிலைகள் மட்டுமின்றி விநாயகர், முருகன் என 4 சிலைகள் கோயிலிலிருந்து திருடு போனதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக ஊர் பொதுமக்கள் தெரிவித்தனர்.   கண்டெடுக்கப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் அம்பாள் சிலைக்கு புதிய துணிகள் மற்றும் மாலைகளை அணிவித்து  மக்கள் பூஜை செய்து வழிபட்டனர். தகவலறிந்த குடவாசல் போலீசார் மற்றும் திருவாரூர் தாசில்தார் நக்கீரன் ஆகியோர் வந்து சிலைகளை தாலுகா அலுவலகதுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் சமாதானத்தின் பேரில் இந்த 2 சிலைகளும் தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

Tags : 2 Idol statue,Patiswaram pond near Thiruvarur
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...