×

காஷ்மீர் பற்றி ராகுல் கூறிய கருத்துக்காக காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்: அமித் ஷா ஆவேசம்

சில்வாசா: ‘‘காஷ்மீர் தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்துக்காக காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்,’’ என பாஜ தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சில்வாசாவில் நடந்த பாஜ பொதுக் கூட்டத்தில், கட்சியின் தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது:பிரதமர் மோடி தலைமையிலான அரசு, காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்ததற்கு மக்கள் ஆதரவு தருகின்றனர். ஆனால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 370 ரத்து நடவடிக்கைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ராகுல் என்னென்ன கருத்துக்களை கூறினாரோ, அவற்றை எல்லாம் பாகிஸ்தான் பாராட்டி உள்ளது. ராகுலின் கருத்துக்களை ஐநா.வுக்கு அளித்த அறிக்கையில் பாகிஸ்தான் கோடிட்டு காட்டியுள்ளது. ராகுலின் கருத்துக்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.

காஷ்மீரின் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். நான் இந்த ஒட்டு மொத்த நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் கூற விரும்புவது என்னவென்றால், காஷ்மீர் முழுவதுமாக அமைதியாக இருக்கிறது. ஒரு துப்பாக்கி குண்டோ அல்லது கண்ணீர் புகை குண்டோ சிறப்பு அதிகாரம் ரத்து  செய்யப்பட்டதில் இருந்து தற்போது வரை காஷ்மீரில் பயன்படுத்தப்படவில்லை. இந்நாள் வரை ஒருவரும் வன்முறைகளில் கொல்லப்படவில்லை. மத்திய அரசின் நடவடிக்கையானது ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடைவதற்கான வழியாகும். தீவிரவாதம் முற்றிலும் ஒடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முழுமையான ஒருங்கிணைந்த பகுதி. கடந்த காலங்களில் பாஜ.வும், பாரதிய ஜன சங்கமும் எதிர்கட்சியாக இருந்தபோது பாகிஸ்தான், சீனா உடனான போர், ஜம்மு காஷ்மீரை ஒருங்கிணைந்த பகுதியாக அறிவிக்கும் தீர்மானங்கள் போன்ற தேசிய நலன் சார்ந்த விவகாரங்களில் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளது. இது நாட்டின் பாரம்பரியமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சிகள் ஆதரவு தரும் பாரம்பரியத்தை உடைத்தெறிந்து விட்டது. நீங்கள் வாக்கு வங்கி அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Congress leaders , ashamed , Rahul's Kashmir: Amit Shah
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...