×

காஷ்மீர் உங்களுக்கு எப்போது சொந்தமானது? பாக்.கிற்கு ராஜ்நாத் சிங் கேள்வி

காஷ்மீர்: ‘‘காஷ்மீர் எப்போதுமே இந்தியாவின் அங்கமாகத்தான் இருக்கிறது. அது எப்போது உங்களுக்கு சொந்தமானது?,’’ என்று பாகிஸ்தானிடம் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், லேவில் நடந்த இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின், `கிசான் ஜவான் விக்யான் மேளா’ நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
காஷ்மீர், இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமையில்லை. இதனை சர்வதேச பிரச்னையாக்கும் அதன் முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன. எந்த உலக நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவையே விரும்புகிறது. அதற்கு பாகிஸ்தான் முதலில் எல்லை கடந்த தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும். ஆனால், பாகிஸ்தான் தனது தீவிரவாத செயல்களின் மூலம் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தில், கடந்த 1994ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உண்மை என்னவென்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்ஜித் பலுசிஸ்தான் பகுதிகளை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது. பாகிஸ்தானிடம் கேட்கிறேன், காஷ்மீர் எப்போது உங்களுக்கு சொந்தமானது? அது எப்போதுமே இந்தியாவின் ஓர் அங்கம். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் மனித உரிமை மீறல், வன்முறைகளில் முதலில் பாகிஸ்தான் கவனம் செலுத்தட்டும். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்க் எஸ்பருடன் தொலைபேசியில் உரையாடிய போது, `சிறப்பு அந்தஸ்து நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்’ என்று கூறினார். இந்த விவகாரத்தில் எந்தவொரு உலக நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மட்டும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக மத்திய அரசு  பிரிக்கவில்லை. இதன் மூலம், மக்களின் பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

25வது நாளாக முடக்கம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பின் அசம்பாவிதங்கள் நடைபெறாததை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது. தொலைத் தொடர்பு, இணையதள சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கின. ஆனால், பாதுகாப்பு கருதி பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. இதனால் பள்ளிகளும், போக்குவரத்து இன்றி சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு அலுவலங்களிலும் மிக குறைந்த அதிகாரிகள், ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால், 25வது நாளான நேற்றும் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கி காணப்பட்டது.



Tags : Kashmir, Rajnath Singh, Pakistan
× RELATED குடியரசுத் தலைவர் மாளிகையில்...