பீகாரில் 30 ஆண்டுகளாக நடந்த முறைகேடு ஒரே சமயத்தில் 3 அரசு வேலை: மோசடி ஊழியருக்கு போலீஸ் வலை

கிஷன்கஞ்ச்: பீகாரில் 30 ஆண்டுகளாக அரசில் 3 பொறுப்புகளை வகித்து, மாதம் 3 சம்பளம் வாங்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.பீகாரை சேர்ந்தவர் சுரேஷ் ராம். அரசின் வெவ்வேறு துறைகளில் ஊழியராக தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். இதற்காக, மாதம்தோறும் அரசிடம் இருந்து அவர் 3 சம்பளத்தையும் பெற்று வந்துள்ளார். மேலும், இவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டு உள்ளது. பொதுப்பணித் துறையில் கட்டுமான துறை உதவி பொறியாளராகவும், பங்கா மாவட்டத்தில் நீர் வளத்துறை அதிகாரியாகவும், பீம்நகர் பகுதியிலும் நீர்வளத் துறை அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார்.

இந்நிலையில், பீகாரில் நிதியமைச்சகம் மூலமாக ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறை சமீபத்தில்  கொண்டு வரப்பட்டது. இதில், ஊழியரின் பெயர், பிறந்த தேதிகளை சரிபார்த்த போது இவர் சிக்கினார். ஒரே பெயர், ஒரே பிறந்த தேதியை இவர் 3 இடங்களிலும் கொடுத்திருந்தார். இது நெருடலை ஏற்படுத்தியதால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அரசு பணியாற்றுவதற்கான முழுமையான ஆதாரங்களுடன் விசாரணைக்கு வருமாறு சுரேஷ் ராமுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால்,  சுரேஷ் ராம் பான் கார்டு, ஆதார் கார்டு ஆகியவற்றை மட்டுமே எடுத்து  வந்துள்ளார். இதனால், அதிகாரிகள் அவரை அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருமாறு  திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து, அவர் மாயமாகி விட்டார். இதையடுத்து சுரேஷ் ராமை டிஸ்மிஸ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.Tags : 30 years , irregularities ,Bihar
× RELATED தகவல் தொடர்பு ஜிசாட் 30 செயற்கைக்கோள்...