சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்பு: காப்பகத்தில் ஒப்படைப்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு காப்பக்கத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தலையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் ரயில்வே போலீசார் மற்றும் ஆர்பிஎப்வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ரயில் நிலைய வளாகத்தில் பல மணி நேரமாக 2 சிறுவர்கள் சுற்றித்திரிவதை கவனித்தனர். இதையடுத்து அந்த சிறுவர்களை ரயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் சிவனேசன் அழைத்து விசாரணை செய்துள்ளார். விசாரணையில் அவர்கள் இருவரும் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ் சிங் ( 15), வருண்(14) என்பது தெரியவந்தது.

 பெற்றோர் திட்டியதால், வீட்டை விட்டு வெளியேறி ரயில் மூலம் சென்னை வந்ததும், இங்கு மெரினா கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்து பின் எங்கே செல்வது என்று தெரியாமல் ரயில் நிலையத்துக்கு வந்ததாக கூறியுள்ளனர்.  இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் சாகிபாபாத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தபோது, சிறுவர்களை காணவில்லை என பெற்றோர் அங்கு புகார் அளித்திருப்பது தெரிந்தது. சென்னையில் சிறுவர்கள் பத்திரமாக இருக்கும் தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து சாகிபாபாத் போலீசாருடன் பெற்றோர் சென்னை விரைந்துள்ளனர்.  சிறுவர்கள் 2 பேரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். சாகிபாபாத் போலீசார் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் வந்தவுடன் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags : Rescue , 2 children, Northern Territory ,Central Railway Station
× RELATED சென்னை சைதாப்பேட்டையில்...