×

காட்பாடியில் ரூ.16.45 கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம் கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்

வேலூர்: காட்பாடியில் ரூ.16.45 கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விளையாட்டு வீரர்கள் நிறைந்த வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு அரங்கம் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. வேலூர் இன்பென்டரி சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அமைக்கப்பட்ட கடந்த 1975ம் ஆண்டு அமைந்த நேதாஜி ஸ்டேடியம் மாவட்ட விளையாட்டு மைதானமாக செயல்பட்டு வந்தது.

அதுவும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஆயுதப்படை மைதானமாக பயன்பாட்டில் உள்ளது. இதனால் ‘உள்ளதும் போச்சு’ என்ற நிலையில் விளையாட்டு மைதானம் இல்லாத மாவட்டமாக வேலூர் மாவட்டம் இன்று வரை விளங்கி வருகிறது.
மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விளையாட்டு வீரர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து வேலூரில் காட்பாடி, ஓட்டேரி, விருதம்பட்டு ஆகிய இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு சில காரணங்களுக்காக கைவிடப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுகள் கழித்து வேலூர் அடுத்த ஊசூரில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படுவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டது. அதற்கேற்ப ஊசூரில் விளையாட்டு மைதானம் அமைவதற்கான அரசாணையும் வெளியானது. அதற்காக ரூ.16.45 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்க இருந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி, விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையில், காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க இறுதிமுடிவு எட்டப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக ஏற்கனவே வெளியான அரசாணை ரத்து செய்யப்பட்டதுடன், அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.16.45 கோடி நிதியில் காட்பாடியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான 36.68 ஏக்கர் நிலத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகள் 10 நாட்களுக்குள் தொடங்க உள்ளது.இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கான கட்டுமான பணிகள் 10 நாட்களுக்குள் தொடங்கப்பட உள்ளது. 8 லைன் கொண்ட 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கோகோ, பால் பேட்மின்டன், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், விளையாட்டு நலன் அரங்கம், பார்வையாளர் அரங்கம், கழிவறை, உணவகம் உள்ளிட்டவை அமைய உள்ளது.

36.68 ஏக்கரில் பாதி அளவிற்கு மட்டுமே தற்போது கட்டுமான பணிகள் மற்றும் விளையாட்டு மைதானம் அமைய உள்ளது. மீதமுள்ள இடத்தில் உள்விளையாட்டு அரங்கம், ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி விடுதிகள் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. முதலில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்ட பிறகு இதற்கான பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. இங்கு உள்விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டால், தமிழக அளவில் பெரிய விளையாட்டு மைதானமாக இது அமையும். மாவட்ட விளையாட்டு மைதானத்திற்குள் விளையாட்டு அரங்கங்கள் அமையும் இடங்கள் குறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளுடன் நாளை (இன்று) ஆலோசிக்கப்பட உள்ளது. விளையாட்டு அரங்கம் இடம் தேர்வான பிறகு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, ஓராண்டுக்குள் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்திற்கான பூமி பூஜை 10 நாட்களில் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Construction works
× RELATED வடகிழக்கு பருவமழை காலத்தில்...