×

நகராட்சி பகுதியில் 15 நாட்களுக்குள் மழைநீர் தொட்டி அமைக்காவிட்டால் குடிநீர் ‘கட்’

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி பகுதி கட்டிடங்களில் 15 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பகுதிகளிலும் உள்ள குடியிருப்பு பகுதி மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத இடங்களில் உடனே, மழைநீர் சேரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வார்டு பகுதியில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த விழிப்புணர்வு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் மற்றும் அரசு கட்டிடங்களில், ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டனர். வார்டு குடியிருப்பு மற்றும் வணிக வளாக கட்டிட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து நகராட்சி அதிகாரிகள் தனிக்குழுவாக சென்று ஆய்வு பணி நடந்தது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாத வீடுகளுக்கு நேரடியாக சென்று மழைநீர் சேகரிப்பு தொட்டியை விரைந்து அமைக்க அறிவுறுத்தினர்.

இருப்பினும் இன்னும் 30 சதவீத கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தாதவர்கள், இன்னும் 15 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும், இல்லை என்றால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்தந்த கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கும் பணியில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறிவுத்தப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என கணக்கெடுக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள வீடுகள் முன்பு நன்றி அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தாத கட்டிடதாரர்களுக்கு முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி இன்னும் சில நாட்களில் நிறைவடையும். உடன், வீடு மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Tags : Drinking Water
× RELATED திருப்புத்தூர் அருகே கண்மாய்...