×

தேவை மற்றும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

திருச்சி: தேவை மற்றும் மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்துடன் தமிழக அரசின் இ-சேவை மையம், தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதன்படி, அரசின் இ-கவர்னஸ் முறையை செயல்படுத்துவதற்கான சிறப்பு மையத்தை திருச்சி திருவெறும்பூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், வருவாய்த் துறையுடன் தகவல் தொழில்நுட்பம் இணையும்போது தமிழகம் மேலும் பல வளர்ச்சி அடையும்.

இ-சேவை முறையை மேம்படுத்துவதற்கும் இடர்பாடுகளை களைவதற்காகவும் அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் சேர்ந்து இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். புதிய மாவட்டங்கள் உருவாக்கம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், தேவை மற்றும் நிலவியல் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகளை ஏற்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார். இதன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் புதிதாக 85 வட்டங்கள், 11 கோட்டங்கள், 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், வருவாய்துறை சேவைகள் எளிதாகவும் விரைவாகவும் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



Tags : New District, RP Udayakumar, E-Service, Revenue Department
× RELATED தினசரி 2 ஆயிரம் அதிகரிக்கும் கொரோனா;...