×

கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கிராமிய கலைஞர்கள் போராட்டம்..!!

சென்னை: கொரோனா 2ம் அலை காரணமாக கோவில் திருவிழா நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கிராமிய கலைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா 2ம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் கோவில் திருவிழாக்களை நடத்த மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி கிராமிய கலைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை தமுக்கு மைதானம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட கலைஞர்கள் சங்கு ஊதி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் உத்தரவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் தளர்வுகளுடன் நாடக நிகழ்ச்சிகளை அனுமதிக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம் நடிகர்கள் மனு அளித்தனர். கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்காவிட்டால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே தஞ்சையில் நாட்டுப்புற கிராம கலைஞர்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் சின்னப்பொண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவில் திருவிழாக்களுக்கான தடையை நீக்கி பட்டினி சாவை தடுத்திட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தொடர்ந்து, நெல்லையில் நாட்டுப்புற இசை கலைஞர்கள் தமிழக அரசின் முடிவை திரும்பப்பெற வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அப்போது இசைக்கலைஞர்கள் பல்வேறு வகையான இசை கருவிகளை இசைத்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர். தமிழக அரசின் முடிவால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மேடை கலைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனைகளோடு அனுமதி தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தடையை நீக்கக்கோரி முறையிட்டனர். அப்போது கலை நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்காவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசின் தடையால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். தடையை நீக்கும் வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் நாட்டுப்புற கலைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். …

The post கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் கிராமிய கலைஞர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona ,2nd wave of Corona ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...