×

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பெயர் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ‘மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து   மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் பெற்று ‘மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்’ என புதிய பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதிய பெயர் பலகையை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் நேற்று திறந்து வைத்தார்.வேலைநாடுநர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டலுக்காக 32 இளம் வல்லுநர் பணியிடமும், 35 தொழில்நெறி ஆலோசகர் பணியிடங்களும்  மறுசீரமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ‘மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவியரின் நலனுக்காகவும், தொழில் திறன் பெற்ற மனித வளத்தை உருவாக்குவதற்காகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது 89 அரசு தொழிற்பயிற்சி  நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அதிக அளவில் பயிற்சியாளர்கள் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தொடர்புடைய துறைகளில் வேலைவாய்ப்புகள் பெற  நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது.  இதன் ஓர் அங்கமாக கோயம்புத்தூர், ஒசூர்,  அம்பத்தூர், பரமக்குடி, திருச்சி ஆகிய தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய தொழிற்பிரிவுகளுக்கான பணிமனைகளுக்கு ரூ.207.05 கோடி செலவில்  கட்டிடங்களும் திறக்கப்பட்டுள்ளது.  

தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள், பயிற்சி அலுவலர்கள், உதவி பயிற்சி அலுவலர்கள் மற்றும் இளநிலை பயிற்சி அலுவலர்கள் ஆகியோருக்கு  ஆண்டுதோறும் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்ற ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய 12 அலுவலர்களுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார். மாநில அளவிலான திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற 6 மாணவர்களுக்கு  விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.25,000 வழங்கப்பட்டது. சிறந்த படைப்பாற்றல் திறனுக்காக பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகை ரூ.50,000- 5 சிறந்த படைப்புகளுக்காக 17 பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டது.


Tags : Name change ,District Employment, Govt
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்