×

சுடுகாட்டிற்கு பாதை இல்லாததால் வேதனை: பாலத்தில் இருந்து கயிற்றை கட்டி சடலத்தை கீழே இறக்கி தகனம்... நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் சடலத்தை மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கி தகனம் செய்த வேதனை சம்பவம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்பன்(55), திருமணமாகி நீண்ட நாட்களாக வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் பகுதியில் மாமனார் வீட்டில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் குப்பன் புத்துக்கோயில் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்தார். இதையடுத்து அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்கள், வீட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

சடலத்தை அந்த கிராமத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் பாலாற்றின் கிளையாக உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். ஆனால் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு நிலத்தின் உரிமையாளர் நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்து வழிவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் குப்பனின் சடலத்தை ஊர்வலமாக பாடை கட்டி தூக்கி வந்த உறவினர்கள், சுடுகாட்டிற்கு செல்லும் வழி இல்லாததால், சுமார் 20 அடி உயரம் உள்ள ஆற்றின் மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி கீழே இறக்கினர்.

பின்னர் அருகே உள்ள சுடுகாட்டிற்கு சடலத்தை தூக்கிச்சென்று தகனம் செய்தனர். வாழும்போதுதான் பல்வேறு பிரச்னைகள் என்றால் இறந்த பிறகும் பிரச்னையா என சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வேதனை தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Sudakkadu, corpse, cremation, natrampalli
× RELATED 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர...