×

காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு..!

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை கடந்த 5ம் தேதி மத்திய  அரசு ரத்து செய்தது. இதனை முன்னிட்டு அசம்பாவிதங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் வகையில் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  வதந்திகள், பொய்  செய்திகள் உள்ளிட்டவை சமூக வலைதளம் மூலம் பரவுவதை தவிர்க்கும் வகையில் மொபைல் இன்டர்நெட் சேவைகள் முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் இந்திய அரசை பாகிஸ்தான் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

இருநாடுகள் இடையிலான தூதரக உறவு, ரெயில் சேவை, பேருந்து சேவை, வர்த்தக உறவை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இதனிடையே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இப்பிரச்னையை சர்வதேச அரங்கில் கிளப்ப முயற்சி மேற்கொண்டது. இந்த  விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற வகையில், மூடிய அறைக்குள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என சீனா கூறியது. இதனை ஏற்று கடந்த 16-ம் தேதி ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. அதன்படி, நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்பிரச்னை பற்றி பேசப்பட்டது. ஆனால், அதில் சீனா மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்ததாகவும், மற்ற நாடுகள் அதை  நிராகரித்ததோடு, இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என கூறி இந்தியாவுக்கு ஆதரவு  தெரிவித்தன.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என உலக நாடுகளும், ஐ.நா.வும் கூறிவிட்டது. இந்திய அரசு இனி பேச்சுவார்த்தையென்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமாகதான் இருக்கும் எனக் கூறிவிட்டது. இதற்கிடையே பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாக செல்ல முடியாது என்பதில் இந்தியா ஸ்திரமாக உள்ளது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை நாட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது என பாகிஸ்தான் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “காஷ்மீர்  விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம்,” எனக் கூறியுள்ளார் என பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ARY News TV செய்தி வெளியிட்டுள்ளது. அனைத்து சட்ட காரணிகளையும் ஆய்வு செய்துதான் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேசி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியை மேற்கோள்காட்டியுள்ளதோடு, மனித உரிமை மீறல்களை மையமாக வைத்து, பன்னாட்டு நீதிமன்றத்தில், பாகிஸ்தான் முறையிடப் போவதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

Tags : Kashmir issue, International Court of Justice, Government of Pakistan,
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்