×

வீடுகள்,அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்புக்கு 3 மாதம் கெடு: உள்ளாட்சி துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: மறுசுழற்சி வசதி இல்லாத அடுக்குமாடி கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும் என்றும் மழைநீர் சேகரிப்பு வசதியை 3 மாதத்திற்குள் அமைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  எச்சரித்துள்ளார். தமிழகத்தில்   சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12,524 ஊராட்சிப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுவது தொடர்பான ஆய்வு கூட்டம்  நகராட்சி நிர்வாக துறை  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று ெசன்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கரன்,  சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன், பேரூராட்சிகளின் இயக்குநர் பழனிச்சாமி, சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள், மண்டல துணை ஆணையர்கள்,  முதன்மை தலைமைப் பொறியாளர், தலைமைப் பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளர்கள், அனைத்து மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: சென்னை மாநகராட்சியில் இதுவரை 2.35 லட்சம் கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். 14  மாநகராட்சி மற்றும் 121 நகராட்சிகளில் உள்ள 15.89 லட்சம் கட்டிடங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 4.96 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். 528 பேரூராட்சிகளில் 14 ஆயிரம் அரசு கட்டிடங்கள், 24.12  லட்சம் வீடுகள், 2.34 லட்சம் வணிக மற்றும் தொழிற்சாலைகள் உட்பட 26.60 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியில் உள்ள மண்ணின் தன்மைக்கு ஏற்ப மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஆய்வுகளுக்கு அதிகாரிகள் தினசரி 2 மணி நேரம் செலவிட வேண்டும்.  நகர்ப்புர, ஊரக மற்றும்   உள்ளாட்சி பகுதிகளில் உள்ள உள்ளாட்சிஅமைப்பு கட்டிடங்கள் உட்பட அனைத்து அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அனைத்து தொழிற்சாலைகள், பெரும் வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள்,  தனிக் குடியிருப்புகள்,  பண்னை வீடுகள், மருத்துவ மனைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், கார்பரேட் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், சாலை ஓரங்களிலும், திறந்த வெளி  இடங்களிலும், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டறிந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் விரைந்து ஏற்படுத்த வேண்டும். நீர்நிலைகள் மற்றும் குளங்களை சுற்றியுள்ள கட்டிடங்களில் சேகரிக்கப்படும் மழைநீர், நேரடியாக  இந்த நீர் நிலைகளில் சென்று சேரும் வகையில் கட்டமைப்புகளை அமைக்க வேண்டும். மனைகளின் பரப்பளவிற்கு ஏற்ப மழைநீர் கட்டமைப்புகள்  மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சியில்  அமைக்கப்பட்டது போன்று அனைத்து மாநகராட்சிகள்,  நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ஒருங்கிணைந்த  குழுக்கள் மழைநீர் சேகரிப்பு  கட்டடமைப்புகள் பணிணை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : அனைத்து வகையான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை 3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்காவிடில் நோட்டீஸ் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் படி அனைத்து  அடுக்குமாடி கட்டிடங்களிலும் நீரை மறுசுழற்சி செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீரை மறுசுழற்சி செய்யும் வசதியை ஏற்படுத்தாத அடுக்குமாடி கட்டிடங்களுக்கு ஒரு வாரத்தில் நோட்டீஸ் வழங்க வேண்டும். இந்த  நிறுவனங்களும் 3 மாதத்தில் இந்த வசதியை அமைக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கும் பணிக்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். நீர் நிலைகள் உள்ள ஆக்கிரமிப்புகளை மீட்க எம்.பி,  எம்.எல்.ஏக்கள் அமைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பராமரிப்பு தொடர்பான  கையேட்டை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டார். மேலும் சமூக பெரு நிறுவன சமூக  பொறுப்பு நிதியின் சென்னையில் உள்ள 34 குளங்களை தூர்வரா  முன்வந்துள்ள தனியா் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்புந்தங்களை வழங்கினார். மேலும் சென்னை  மாநகராட்சியில் வீடற்றவர்களுக்கான காப்பகங்களில் தங்கி பயின்று 10 மற்றும்  12ம் வகுப்பு  தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் அமைச்சர் வழங்கினார்.

மாநகராட்சியை பின்பற்ற வேண்டும்
சாலைகளில் நீர் தேங்கும் இடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது  தொடர்பாக சென்னை மாநகராட்சியின் திட்டத்தை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் செயல்படுத்த வேண்டும். சென்னை மாநகராட்சி நடத்தியதுபோல்  பெரு நிறுவனங்களை அழைத்து கூட்டம் நடத்தி சமூக பொறுப்பு நிதியின் மூலம் நீர் நிலைகளை தூர்வாரும் பணியை செய்ய வேண்டும் என்று முதன்மை செயலாளர் ஹர்மர்ந்தர் சிங் தெரிவித்தார்.

Tags : Homes, apartments, offices,rainwater, harvesting
× RELATED மூன்று சக்கர வாகனம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தர்ணா