×

ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்...மாநில முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: ஆகஸ்ட் 20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம் 26ம் தேதி மாநில  முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம்  நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் இதுவரை அதற்கு நேரம்  வாய்க்கவில்லை. வட கர்நாடகாவில் பலத்த மழை, காஷ்மீர் மாநிலம் பிரிப்பு, எம்எல்ஏ பதவி இழந்த 17 பேர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது ஆகியவற்றால் அமைச்சரவை விரிவாக்கம் தாமதமானது.

இந்நிலையில்,இன்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, நாளை மறுநாள் 20-ம் தேதி கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பாஜக  சட்டமன்ற கட்சிக்கூட்டம் அமைச்சரவை விரிவாக்கத்துக்கு பின்பே நடைபெறும் என்றும் எடியூரப்பா தகவல் தெரிவித்தார். கர்நாடகா அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய கட்சி மேலிட அனுமதி பெற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்:

இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, எனது தலைமையில் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரின்  தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் என்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்த பிறகு, இந்த விவகாரத்தில் என் மீது புகார் கூறுவது ஏன்? பாஜக ஆட்சி நடைபெறுவதால் இந்த விவகாரம்  குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஜத முன்னாள் எம்எல்ஏ எச்.விஸ்வநாத் என் மீது இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க நான் விரும்பவில்லை. கடந்தாண்டில் ஒரு சிலர் என்னிடம் எப்படி நடந்து கொண்டுள்ளனர் என்பதனை நான் அறிவேன். ஆனால், யாரைப் பற்றியும் இப்போது நான் எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை.  தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே தெரியவரும் என்றார்.  இதற்கு இன்று பதிலளித்த மாநில முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் உள்பட பலர் தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்களின் தொலைபேசி ஓட்டுகேட்கப்பட்டது  தொடர்பான புகாரை சிபிஐ விசாரிக்கும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.


Tags : Karnataka Cabinet Expansion, BJP Legislative Assembly, Chief Minister Yeddyurappa
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...