×

உழைப்புக்கு என்றுமே ‘ஓய்வு கிடையாது’ வனத்தில் 1 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 50,000 கிளிக்ஸ்: ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் போட்டோ வேட்டை

விருதுநகர்: உழைப்புக்கு ஓய்வு கிடையாது என்பதுபோல, விருதுநகரை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்பொறியாளர் சுமார் 1 லட்சம் கிமீ தூரம் வனப்பகுதிகளுக்குள் பயணித்து, 50 ஆயிரம் விலங்குகளை படம் பிடித்து அசத்தி உள்ளார்.
விருதுநகர், பாண்டியன் நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற மின்பொறியாளர் மோகன்குமார் (70). ஓய்வுக்கு பின் வீட்டில் முடங்கி விடாமல் இயற்கை மற்றும் வனவிலங்கு புகைப்படக்கலைஞராக வனப்பகுதிகளுக்குள் சுமார் ஒரு லட்சம் கி.மீ தூரம்  பயணித்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்து சாதித்துள்ளார்.மோகன்குமார் சமீபத்தில் தனது ‘A Common man Becomes Tiger man’ (ஒரு சாதாரண மனிதன் புலி மனிதனாகிறான்) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.  வனத்திற்குள் புகைப்படம் எடுத்த அனுபவங்களை மோகன்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்...அவர் கூறியதாவது:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் பிறந்து, தமிழக மின்வாரியத்தில் 1966ல் தினக்கூலியாக சேர்ந்து படிப்படியாக முன்னேறி, இளநிலை பொறியாளராக பணியாற்றி 2007ல் ஓய்வு பெற்றேன். வேலைக்கு சேர்ந்த முதல் ஊதியத்தில் கேமரா  வாங்கி மரங்கள், காடுகளை படம் எடுத்தேன். குடும்பச் சூழலால் கேமராவை கையில் எடுப்பதை நிறுத்தினேன். 2008ல் மனைவி ராதா இறந்தார். இரு குழந்தைகள் சென்னை, பெங்களுரில் பணியில் உள்ளனர். ஓய்வுக்கு பிறகு தனிமையில்  இருந்து மீள மீண்டும்  என்பதற்காக கேமராவை மீண்டும் கையில் எடுத்தேன். முதன்முதலாக குற்றாலம் அருகே கும்பாவுருட்டி அருவி பகுதியில் எடுத்த அணில் படம் வாரப்பத்திரிக்கையால் சிறந்த படமாக தேர்வானது. அந்த அணில் படத்தை  எடுத்தபோது, என் பின்னால் இருந்து ஒரு பெண் வீசி எறிந்த பிஸ்கட்டை, அணில் பிடித்து கையில் வைத்திருந்ததால் உலகின் சிறந்த புகைப்பட வரிசையில் இடம் பிடிக்க முடியாமல் போனது. அதன்பின் புலியை படம் பிடிக்க 2 ஆண்டுகள்  தொடர்ந்து முயன்றேன். தென்னகத்தில் புலி கிடைக்காமல் 2011ல் ராஜஸ்தான் மாநிலம், ரந்தபூரில்  5 நாட்கள் காத்திருந்தும் புலி கிடைக்கவில்லை. மத்திய பிரதேசம், கானாவிலும் கிடைக்கவில்லை.

இறுதியாக மத்தியபிரதேச பாந்தோகர் வனத்திற்கு சென்றேன். 3 நாட்கள் காத்திருந்து பெண் புலியையும், 15 நிமிட இடைவெளியில் ஆண் புலியையும் படம் பிடித்தேன். அதைத்தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலிகளை படம் எடுத்துள்ளேன்.  ஒருமுறை கர்நாடக மாநிலம், நாகர்ஹோலே வனத்திற்குள் ஆண் யானையை படம் பிடிக்க சென்றேன். திரும்பி பார்த்தபோது யானை விரட்டியது, காரில் ஏறி தப்பிய நிலையில் யானை ஒரு கிமீ தூரம் எங்களை விரட்டி வந்தது.
கேரள வனப்பகுதியில் ஒரு வாரம் காத்திருந்து ‘ஹார்ன்பில்’ பறவையை எடுத்தேன். கென்யா, மாசைமாரா வனத்தில் இருந்து காட்டுமான்கள் இடம் பெயர்ந்து தான்சான்யாவிற்கு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பசுமையை தேடி  செல்வது வழக்கம். அவை மாரா ஆற்றை கடக்கும்போது, காட்டுமான்களை முதலைகள் இழுத்து செல்லும். உயிரை காப்பாற்ற இடம் பெயரும் காட்டுமான்களை படம் எடுத்துள்ளேன். ஆப்ரிக்க காடுகளில் சிறுத்தைகள், சிங்கங்களை படம்  பிடித்துள்ளேன்.

தமிழகத்தில் முதுமலை, துவங்கி மத்தியபிரதேசம் பந்தோகர், ராஜஸ்தானில் ரெந்தம்பூர், மகாராஷ்டிராவில் தடபோடா, கர்நாடகாவில் கபினி, பந்திப்பூர் காடுகளிலும் ஆப்ரிக்க காடுகளிலும், சுமார் 1 லட்சம் கிமீ தூரம் காரில் பயணித்து 50  ஆயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை எடுத்துள்ளேன். இதுவரை 30க்கும் மேற்பட்ட சிறந்த புகைப்பட விருதுகள், அமெரிக்க உலகத்தமிழ் பல்கலை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். இயற்கை மற்றும் வனவிலங்கு புகைப்பட  கலைஞர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க ஆரம்பித்தால் உங்கள் கண்முன் தெரிவது எல்லாம் நல்லதாக தெரியும். வன விலங்குகளும், இயற்கையும் அழிந்து வருகிறது. வனத்தை  பாதுகாத்தால் தான் மழை பொழியும். வனங்களுக்குள் மனிதர்கள் தேவையற்ற வகையில் நுழைவதை தடுக்க வேண்டும். இயற்கை மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கும் கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வனத்திற்குள் செல்ல  அடையாள அட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Retired Public Servant, Photo
× RELATED பொதுப்பணி, நீர்வளத்துறையில் 36...