×

கிருஷ்ணகிரியில் ஊழியர் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்: 50 சதவீத கடைகள் அடைப்பு

சென்னை:  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கொள்ளையர்களால் கடந்த 14ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கூட்டுக்குழு சார்பில் கடைகளை அடைத்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் உள்ளிட்ட 8 தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.  ஊழியர்கள் தொடர் போராட்டத்தினை அடுத்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஊழியர்களின் கோரிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.

அப்போது, படுகொலை செய்யப்பட்ட ஊழியரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும், அம்மா உணவகங்களில் நேரடியாக விற்பனை தொகை பெற்று செல்லப்படுவதை போல டாஸ்மாக் கடைகளிலும் பெற்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகள் அடங்கிய மனு கூட்டுக்குழு சார்பில் அளிக்கப்பட்டது.  தொடர்ந்து, கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மேலாண்மை இயக்குனர் உத்தரவாதம் அளித்ததையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தமிழகம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தால் மதியம் 3 மணி வரை 50 சதவீத டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. சென்னையை தவிர்த்து வெளி மாவட்டங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதாகவும் கூட்டுக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Krishnagiri, employee slaughter, demonstration
× RELATED வேலூர் மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ்...