×

கிருஷ்ணகிரி அருகே பயங்கரம் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் குத்திக்கொலை: ரூ.1.50 லட்சம் துணிகர கொள்ளை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே பேட்டப்பனூர் கிராமத்தில், அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையில், திருச்சி மாவட்டம் முசிறி அருகே காவேரி நகர் அடுத்த மீனாட்சி மண்டபம் பகுதியைச் சேர்ந்த ராஜா (43) என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடையின் மேற்பார்வையாளராக, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா அரகாசனஹள்ளியைச் சேர்ந்த ஜெகநாதன் (42) உள்ளார். நேற்று முன்தினம், விற்பனையாளர் ராஜா வழக்கம் போல பணியில் ஈடுபட்டிருந்தார். இரவு கடை மூடும் நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் கடைக்கு வந்து, பாட்டில்களை மொத்தமாக கேட்டனர். இதனால், கடைக்குள் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு ராஜா சென்றார்.

அப்போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த கத்தியால் விற்பனையாளர் ராஜாவை, சரமாரியாக குத்தியுள்ளனர். மார்பு மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டு விழுந்ததில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து, அந்த மர்ம கும்பல் கடையில் இருந்த மது பாட்டில்கள் மற்றும் மது விற்பனை செய்த பணம் ரூ.1.50 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்நிலையில், வெளியே சென்றிருந்த மேற்பார்வையாளர் ஜெகநாதன், கடைக்குள் வந்து பார்த்த போது விற்பனையாளர் ராஜா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். கொலை நடந்த டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் மதியம் 12 மணி முதல் இரவு வரையில் மது விற்பனை நடந்திருந்தது. நேற்று சுதந்திர தினத்தையொட்டி மதுக்கடைகளுக்கு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் மது விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. அவ்வாறு வசூலான தொகையை கொள்ளையடிக்கும் நோக்கத்தில், விற்பனையாளரை கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கொள்ளை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஒரு மணி நேரம் இன்று கடையடைப்பு:
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் மாநிலத்தலைவர் பாலுச்சாமி, மாநில பொதுச்செயலாளர் ராஜா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று (ஆக.16) ஒரு மணி நேரம் கடையடைப்பு போராட்டம் நடத்தி கண்டனத்தை தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.


Tags : Krishnagiri, horror, task shop, seller, piercing
× RELATED கிருஷ்ணகிரியில் நாளை ஒரே நாளில் 1...