×

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: தூத்துக்குடியில் டி.ராஜா குற்றச்சாட்டு

தூத்துக்குடி: விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என்று தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச்செயலாளர் டி.ராஜா குற்றம்சாட்டினார். தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்ட மாநாட்டு நுழைவாயிலில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா நேற்று தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய பாஜ அரசு அகற்றியுள்ளது.

அதனை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது, ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும். அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும். இந்திய கூட்டாட்சி தத்துவத்தின்படி அந்த மாநில மக்களின் கருத்துகளையும், அம்மாநில அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் கேட்காமல் எடுக்கப்பட்டுள்ள முடிவு சரியானதல்ல. நாட்டில் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி வந்துவிட்டது என்று யாரும் கருத முடியாது. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என வார்த்தை ஜாலம் விட்டு வருகிறது. மத்திய அரசு விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை விவசாயிகளின் நிலைமை குறித்து விவாதம் நடத்தாமல், மக்களை திசை திருப்பும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மீது மக்களுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாநில அரசு, தமிழர்களின் உரிமையை கைவிட்டுள்ளது. தமிழர்களின் நலனை காப்பாற்ற முடியாத அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்துள்ளது, ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும்.

Tags : Farmers, against, Central Government, D. Raja, indictment
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...