×

சுதந்திர தினத்தை முன்னிட்டு 448 கோயில்களில் சமபந்தி விருந்து: முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் நேற்று சமபந்தி விருந்து நடந்தது. இதில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் திருக்கோயில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்கும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு சுதந்திர தினமான நேற்று தமிழகம் முழுவதும் 448 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி விருந்து நடந்தது. சென்னை திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் சபாநாயகர் தனபால்,  கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் நடந்த விருந்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் செங்கோட்டையன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் ராஜூ, தம்பு செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் பி.தங்கமணி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராயப்பேட்டை சித்தி புத்தி  விநாயகர் (ம) சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைச்சர் டி.ஜெயக்குமார், திருவான்மியூர் பாம்பன் கோயிலில் அமைச்சர் சி.வி.சண்முகம், தங்கசாலை ஏகாம்பரேசுவரர் கோயிலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், வடபழனி முருகன் கோயிலில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை  துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பல்வேறு கோயில்களில் நடந்த விருந்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கோயில்களில் நடந்த சமபந்தி விருந்தில் அரிசி சாதம், சாம்பார், மோர், ரசம், வடை, பாயசம், அப்பளம், பொரியல், அவியல், காரக்குழம்பு, இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன. இவ்விழாவில் கலந்துகொண்ட சேவார்த்திகளுக்கு வேட்டி மற்றும் சேலை  வழங்கப்பட்டது. இதேபோல், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோயில்களில் மாவட்ட ஆட்சியர்கள்,  எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags : Samapandi banquet, 448 temples , honor ,Independence Day
× RELATED ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலுக்கு...