×

கிருஷ்ணகிரியில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் போலீசார் குவிப்பு: கிராம மக்களிடையே பதற்றம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால், அக்கிராம மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் அத்திப்பாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 25 குடும்பங்கள் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான ஒரு பெரிய மலையும் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அக்கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறவிருந்தது. இதில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திப்பாடி கிராம சபை கூட்டத்தில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் அக்கிராம மக்களடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கவும் மக்கள் யாரும் வரவில்லை என கூறப்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த முறை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தின்போதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததாகவும், அப்போது 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைய கூட்டத்தில் 8 வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், கடந்த முறை போன்று இம்முறையும் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்பதால் கிராம சபை கூட்டத்திற்கே வரவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அதிகாரிகள் மற்றும் போலீசார் மட்டுமே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதற்கிடையில், அத்திப்பாடி கிராமத்தில் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ஆனால், கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படாது என அதிகாரிகள் மறுத்துவிட்ட நிலையில், அங்கு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே வாக்குவாதம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.


Tags : Krishnagiri, eight lane road, village council meeting, police focus, villagers
× RELATED திருவண்டார்கோவில்- கொத்தபுரிநத்தம் சாலையை சீரமைக்க கோரிக்கை