×

விழுப்புரம் நகராட்சியில் டெண்டரில் பங்கேற்க விடாமல் தடுத்த குண்டர்கள்: அதிமுக பிரமுகர் அராஜகம்; போலீசார் விரட்டியடிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகளில் பழுதடைந்த தெருமின்விளக்கு சுவிட்ச் பாக்ஸ்களை புதிதாக மாற்றவும், மின்அழுத்தம் உள்ள இடங்களில் புதிய பாக்ஸ் அமைத்திடவும் 9.50 லட்சம் மதிப்பிலும், எல்இடி மின்விளக்கு  பொருத்தும் பணி, பராமரிப்பு பணிகளுக்கு மொத்தம் 36.40 லட்சம் மதிப்பிலும் டெண்டர் கோரப்பட்டது. இதில் கலந்து கொள்பவர்கள் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை விண்ணப்பிக்கலாம் என்றும் நகராட்சி ஆணையர்  லட்சுமி தெரிவித்திருந்தார்.அதன்படி நேற்று காலை டெண்டர் விண்ணப்பத்திற்கான பெட்டி ஆணையர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டது. அங்கு காலையிலேயே வந்த அதிமுக பிரமுகர் ஒருவர் விண்ணப்பத்தை பெட்டியில் போட்டார்.  தொடர்ந்து மற்ற ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பங்களை போடாதவகையில் 30க்கும் மேற்பட்ட குண்டர்களை திரட்டி நுழைவாயில் முன்பு தடுத்து நிறுத்தினார். மேலும் சிலர் பெட்டியின் மீது உட்கார்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  வந்த ஒப்பந்ததாரர் அகமது என்பவர் பெட்டியில் மனு போடமுயன்றபோது அதிமுக பிரமுகர் குண்டர்களை வைத்து தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து டிஎஸ்பி திருமாலுக்கு தகவல் சென்ற நிலையில் மப்டியில் அங்கு வந்த அவர் குண்டர்களின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கினார். சில நிமிடத்தில் போலீசாரும் அங்கு  விரைந்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டிருந்த மற்ற குண்டர்களையும் விரட்டிப்பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். மேலும் பலரை அங்கேயே போலீசார் அடித்து, உதைத்து அப்புறப்படுத்தினர்.  பின்னர் நகராட்சி அதிகாரிகளை வரவழைத்த டிஎஸ்பி திருமால், டெண்டர் நடக்கிறது, பிரச்னை உள்ளது என்ற விவரத்தை முன்கூட்டியே ஏன் காவல்நிலையத்திற்கு தெரிவிக்கவில்லை என்றும், இருதரப்பினர் மோதிக்கொண்டால் யார் பதில்  கூறுவது? பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று சரமாரியாக கேள்வி எழுப்பிவிட்டு சென்றார்.

Tags : Villupuram Municipality, Prime Minister, Police
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...