×

மணிகண்டன் அமைச்சர் பதவி பறிப்புக்கு நானும் காரணம்: கருணாஸ் பேட்டி

ராமநாதபுரம்: மணிகண்டனின் அமைச்சர் பதவி பறிபோனதற்கு நானும் ஒரு காரணம் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது திருவாடானை தொகுதியில் குடிமராமத்து  பணிகள் மூலம் கண்மாய்களை தூர்வார, மடைகள் கட்ட அரசு உத்தரவிட்டு நிதி ஒதுக்கியுள்ளது. 22 கண்மாய்களில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. பணிகள் நடக்கும் இடங்களில் சில அரசியல்வாதிகள் தொந்தரவு உள்ளதாக விவசாயிகள்  என்னிடம் கூறினர். இதுகுறித்து கலெக்டரை சந்தித்து  குடிமராமத்து பணிகள் அரசியல் இடையூறு இல்லாமல் நடக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளேன்.

அமைச்சர் மணிகண்டனை பற்றி முதன்முறையாக நேரடியாகவும், வெளிப்படையாகவும் முதல்வரிடம் புகார்களை கொடுத்தது நான்தான். ஆனால் அவரை நீக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. என்னுடைய தொகுதியில் அவரது  தலையீடு அதிகமாக இருந்தது. தொகுதி பணிகளை செய்ய முடியவில்லை. நல்ல திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. எதிர்பார்ப்புகள் மக்களுக்கு அதிகமாக இருக்கிறது என முதல்வரிடம் நேரடியாக புகார் அளித்தது நான்தான். அமைச்சரை நீக்கியதற்கான விளக்கம் தற்போது வந்து விட்டது. அமைச்சர் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணம். பதவி வரும்போது பணிவு வரவேண்டும்.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும்போதே எனக்கு அமைச்சர் பதவி  அளிப்பதாக சொன்னார்கள். அவர் இல்லை. அதனால் அது நடக்கவில்லை. அதை பற்றி எனக்கு வருத்தம் இல்லை. மக்கள் பணியாற்ற இந்த பதவியே எனக்கு போதும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Manikandan, Minister, Karunas
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...