×

மேட்டூர் அணையில் இருந்து 25,000 கனஅடி திறக்க வேண்டும் இல்லாவிட்டால் மூடிவிடலாம்: பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மேட்டூர்: தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நேற்று மேட்டூர் அணை பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி:கர்நாடக, கேரள மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை  பெய்ததையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடியை இழந்த காவிரி டெல்டா விவசாயிகள் மிகுந்த நம்பிக்கையுடன் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நாற்று விடும் பணிகளில்  ஈடுபட்டு வருகின்றனர். மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,000ம் கனஅடி தண்ணீர் மட்டுமே விடுவிப்பதால் கல்லணைக்கு அதிகபட்சம் 5,000 கனஅடி நீரே வந்து சேரும். கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாறுகளின் முழு  பாசன அளவான தலா 9,500 கனஅடியும், கல்லணை கால்வாயில் 3,000 கனஅடியும், வழியோர மாவட்டங்களில் சுமார் 2,000 கனஅடி என கூடுதலாக 24,000 கனஅடி நீர் தேவைப்படும்.

எனவே, மேட்டூர் அணையில இருந்து குறைந்தபட்சம் 25,000 கன அடிநீர் விடுவித்தால்தான் பயன்பெற முடியும். 10,000 கன அடி விடுவிப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுவதோடு வீணடிக்கப்படும். எனவே, 15 நாட்கள் வரை  தொடர்ந்து 25,000 கன அடி தண்ணீரை தொடர்ந்து விடுவித்து கடமடை வரை காவிரி நீரை கொண்டு சென்று பாசனத்தை உறுதிப்படுத்தி சாகுபடி பணிகளை துவங்கிட வேண்டும். இல்லையெனில்,நீர் வீணாவதை தடுக்கும் வகையில் மேட்டூர்  அணையை மூடிவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mettur Dam, BR Pandian
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...