×

என்ஐஏ, முத்தலாக், காஷ்மீர் போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களே தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் பேட்டி

வேலூர்: என்ஐஏ, முத்தலாக், காஷ்மீர் போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான திட்டங்களே எனது தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று வேலூரில் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார். வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வேலூர் மக்களவை தேர்தல் இவ்வளவு விரைவாக நடக்க நான் தான் காரணம். ஆனால் நூல் இழையில் எங்கள் வெற்றி பறிபோனது. இருந்தாலும் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக லட்ச கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள். வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தத்தில் அதிமுக தான் வென்றுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இது வெற்றிபெற்ற தொகுதியாகவே இருக்கிறது. ஆனால் மக்களவைக்கு என்னால் செல்ல முடியவில்லை.

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தில் என்ஐஏ சட்டம், முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளால் சிறுபான்மை மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து மாலை 4 மணி வரை வாக்களிக்காமல் இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஒரு சில தலைவர்கள் இறங்கி பணியாற்றியதால் 4 மணிக்கு மேல் 6 மணி வரை சிறுபான்மை மக்கள் வாக்குகளை போட்டனர். ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவிட்டால் திமுக 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றிருக்கும். இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. இது வேலூர் மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம் தான். பணியாற்ற வாய்ப்பு இல்லாதது வருத்தம். மக்கள் என்னை கைவிட்டாலும், நான் மக்களை கைவிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Such ,NIA, Muthalak, Kashmir, Islam,AC Shanmugam
× RELATED கேரளாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா...