×

எதிர்க்கட்சி எம்எல்ஏ.க்கள் 10 பேர் பாஜ.வில் இணைந்தனர் சிக்கிம் அரசியலில் திடீர் திருப்பம்: ஒரு இடம் கூட இல்லாமல் இருந்தது எதிர்க்கட்சி ஆனது

புதுடெல்லி: சிக்கிம் மாநிலத்தின் எதிர்க்கட்சியான எஸ்டிஎப்.பின் 10 எம்எல்ஏ.க்கள் பாஜ.வுக்கு தாவினர். இதனால், இம்மாநிலத்தில் ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜ, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 32 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) கட்சி 17 இடங்களைப் பற்றி ஆட்சியை பிடித்தது. சிக்கிம் ஜனநாயக முன்னணி (எஸ்டிஎப்) 15 இடங்களில்  வென்று தோல்வி அடைந்தது. இதனால், நாட்டிலேயே அதிக ஆண்டுகள் (25 ஆண்டு) முதல்வராக இருந்து சாதனை படைத்த அக்கட்சி தலைவரான பவன் குமார் சாம்லிங் பதவியை இழந்தார்.ஆளும் எஸ்கேஎம் கட்சியை சேர்ந்த ஒருவர் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். பின்னர், அதில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். இதனால், இக்கட்சி 16 எம்எல்ஏ.க்களுடன் ஆட்சி அமைத்துள்ளது. அதேபோல், எஸ்டிஎப் கட்சி எம்எல்ஏக்கள்  2 பேர் தலா 2 இடங்களில் போட்டியிட்டு வென்றிருந்தனர். அவர்கள் தலா ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ததால் எஸ்டிஎப் கட்சியின் பலம் 13 ஆக இருந்தது. பாஜ ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில், எஸ்டிஎப் கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் இரண்டாக பிரிந்துள்ளது. அக்கட்சியின் 10 எம்எல்ஏக்கள், டெல்லியில் நேற்று பாஜ செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் வடகிழக்கு மாநில பொறுப்பாளரும்  பொதுச் செயலாளருமான ராம் மாதவ் முன்னிலையில் முறைப்படி பாஜ.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள், மற்றொரு கட்சிக்கு தாவினால், அது  கட்சி பிளவாக கருதப்படும். அந்த உறுப்பினர்களின் பதவி பறிபோகாது.இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த ராம் மாதவ், ‘‘விரைவிலேயே எஸ்டிஎப் கட்சியை பாஜ.வுடன் இணைக்க அக்கட்சியின் சட்டப் பேரவைக் குழு முடிவு செய்துள்ளது. இனி, சிக்கிமில் பாஜ ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக  செயல்படும்,’’ என தெரிவித்தார். 10 எம்எல்ஏ.க்கள் இணைந்துள்ளதின் மூலம், ஒரு எம்எல்ஏ கூட இல்லாத பாஜ, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. தற்போது ஆளும் எஸ்கேஎம் கட்சி பாஜ தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக  கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. பவன் குமார் சாம்லிங் ஆட்சியில் 3 முறை அமைச்சராக இருந்த டோர்ஜி ஷெரிங் லெப்சாவும் பாஜ.வில் இணைந்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி அரசின் ‘கிழக்கு நோக்கிய பார்வை’ திட்டத்தால் ஈர்க்கப்பட்டு நாங்கள் பாஜவில்  இணைந்துள்ளோம். சிக்கிமில் தாமரை மலர விரும்புகிறோம். சிக்கிம் மாநில கட்சி எம்எல்ஏக்கள் தேசிய கட்சியில் ஒட்டு மொத்தமாக இணைவது வரலாற்றில் இதுவே முதல் முறை,’’ என்றார்.

வடகிழக்கில் எஞ்சியிருந்த சிக்கிமையும் பிடிச்சாச்சு
வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் பாஜ தலைமையிலான ஆட்சி அல்லது அதன் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதில், எஞ்சியிருப்பது சிக்கிம் மட்டுமே. சிக்கிமில் ஆளும் எஸ்கேஎம் கட்சி பாஜ தலைமையிலான வடகிழக்கு  ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும், சட்டப்பேரவை தேர்தலை தனித்தே எதிர்கொண்டது. அங்கு பாஜ.வுக்கு ஒரு எம்எல்ஏ கூட இல்லாததால் ஆட்சியில் அங்கம் வகிக்க முடியவில்லை. தற்போது, 10 எம்எல்ஏ.க்கள்  கிடைத்திருப்பதால் சிக்கிமில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு பாஜ.வுக்கு வந்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 3 தொகுதிகளில் பாஜ போட்டியிட முடிவு செய்துள்ளது. அதில் வெற்றி பெற்றால், ஆளும் கட்சியை உடைத்து ஆட்சியை  பிடிக்க வாய்ப்புள்ளது.

Tags : Ten , MLAs, BJP, Sikkim Politics
× RELATED பாஜக ஆளும் மாநிலங்களில் 6 மாதங்களில் 4...