×

வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச்சென்றவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோரிக்கை

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை தனது வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசத்துடன் நேற்று சந்தித்தார். அவர் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வேளச்சேரி தொகுதியில் வாக்குப் பதிவு முடிந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மாநகராட்சி ஊழியர்கள் தூக்கிச் சென்றனர். இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தேன்.அதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் அதிகாரி, ஊழியர்கள் கொண்டு சென்றது மாற்று இயந்திரங்கள்தான் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டவை அல்ல என்றார். இந்நிலையில், அந்த வாக்கு பதிவு இயந்திரம் 50 நிமிடங்கள் வாக்குகள் பதிவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் 15 வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் வெளிப்படையாக இப்போது தெரிவித்துள்ளது. வேளச்சேரி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை வேறு நபருக்கு உதவுவதற்காக சட்ட விரோதமாக வெளியே எடுத்துச் செல்ல உதவியதுடன் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தவறான தகவலையும் தந்துள்ளனர்.இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையத்தின் சொத்துகளை திருடி சென்று வேறு நபர்களுக்கு உதவ நடந்த முயற்சி யாருக்காக நடந்தது, அதற்கு உடந்தையான அதிகாரிகள், ஊழியர்கள் யார், யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதுடன் உடனடியாக அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தவறான தகவல்களை தந்த அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தூக்கிச்சென்றவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வேட்பாளர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : FIR ,Velachery ,Congress ,Chief Electoral Officer ,Chennai ,Velachery Constituency ,Asan Maulana ,Satyapratha Chagu ,AP ,Suriyaprakasha ,Dinakaran ,
× RELATED ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகரில்...