×

காஷ்மீரில் பெண் எடுக்கலாம் என்று பாஜவினர் கீழ்த்தரமாக பேசுகின்றனர்: கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு

சென்னை:தமிழக காங்கிரஸ் சார்பில், காஷ்மீர் உரிமை பறிப்பு கண்டன பொதுக்கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டன உரையாற்றினார். இதில், மேலிட பொறுப்பாளர் சஞ்சய்தத், கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ, ஈவிகேஎஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டர்அல்போன்ஸ், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், எம்பிக்கள் வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம், ஹசன் ஆரூண், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம். சிவராஜசேகரன், ரூபிமனோகரன், வீரபாண்டியன், தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் தி.நகர் ராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: நேரு தன்னுடைய பெருமுயற்சியின் காரணமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொண்டார். ஆனால் ஒரு நயவஞ்சக கூட்டம் காஷ்மீர் இணைப்பு தவறு என்று கூறுகின்றனர். அதற்கு துணையும் போகிறார்கள். காஷ்மீரில் நிலம் வாங்க முடியாது என்று முன்பு இருந்ததாகவும், 370 சட்டப்பிரிவை நீக்கிய பிறகு காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதிகளில் இப்போதும் நாம் நிலம் வாங்க முடியாது என்று அவர்களுக்கு தெரியாதா?. காஷ்மீரை மட்டும் பிரித்தாளும் சூழ்ச்சியால் 370 சட்டப்பிரிவை நீக்கியுள்ளனர். காஷ்மீரில் பெண் எடுத்துக்கொள்ளலாம் என்று பாஜவினர் கீழ்த்தரமாக பேசுகின்றனர். காஷ்மீர் விவகாரத்தில் மோடியால் ஒரு அழிவைத்தான் கொடுக்க முடிந்ததே தவிர ஆற்றலை கொடுக்க முடியவில்லை.

காஷ்மீர் பிரச்னையில் இஸ்லாமியர்களின் மனதில் மோடி கத்தியை பாய்ச்சியிருக்கிறார். தமிழகத்தில் மோடி அரசை காலூன்ற விடாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை சிறப்பாக அமைத்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இது தான் நம்முடைய கூட்டணி.  இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் மத்திய நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘‘பாஜவினர் வரலாறு தெரியாமல் பேசுகின்றனர். நேருவும், பட்டேலும் சண்டை போட்டதாக கூறுகின்றனர். நாளை அமித்ஷாவுக்கும், மோடிக்கும் இடையே சண்டை நடக்காது என்று யாரும் கூற முடியுமா, அவர்களுக்கு இடையே கண்டிப்பாக சண்டை நடக்கும். காஷ்மீர் மக்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்று கேட்கின்றனர். 370 சட்டப்பிரிவை நீக்கியது சட்ட துரோகம், நமக்கு துணையாக திமுக இருக்கிறது. இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை நினைத்து காங்கிரஸ் தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். காஷ்மீருக்காக எங்களின் போராட்டம் இது ஆரம்ப கட்டம்தான். இது தொடரும்’’ என்றார்.

Tags : Baja, Kashmir ,woman,KS Alagiri
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...