×

7 அடி பாலம் 20 அடியாக மாறுகிறது பாளையங்கால்வாயில் ரூ.50 லட்சத்தில் புதிய பாலம்

நெல்லை :  பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் பூங்கா எதிரே உள்ள சாலையில் பாளையங்கால்வாயை கடக்க 7 அடி அகல சிறிய பாலம் இருந்தது. இதனை விவசாயிகள் இடுபொருட்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர்.  நாளடைவில் திருவனந்தபுரம் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த பாலம் பகுதி மற்றும் அதை ஒட்டிய வாய்க்கால் கரை சாலையை ஊசி கோபுரம் வரை இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும் பயன்படுத்த தொடங்கின.

இந்த நிலையில் பாலம் பழுதடைந்தது. பாலத்தின் மையபகுதியில் பெரிய அளவில் ஓட்டை விழுந்தது. பாலம் அபாய நிலையில் இருந்த போதும் அதன் ஓரமாக சிறிய பகுதி வழியாக ஆட்டோ, பைக்குகள் திகில் பயணத்தை தொடர்ந்தன.


இதனிடையே இந்த பாலத்தை தொடர்ந்து தெற்கு பைபாஸ் சாலை செல்லப்பாண்டியன் மேம்பாலம் வரை புதிய இணைப்பு சாலை அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அந்தப்பணிக்கும் இந்த பாலம் தடையாக இருந்தது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் உடைந்த இந்த பாலத்தை சீரமைக்கும் பணியை ெபாதுப்பணித்துறையின் பாளையங்கால்வாய் கோட்டப்பிரிவினர் தொடங்கியுள்ளனர்.

ரூ.50 லட்சம் மதிப்பில் 20 அடி அகலத்தில் புதிய பாலமாக கட்ட உள்ளனர். புதிய பாலம் கட்டும் பணிக்காக பழைய பாலத்தை உடைத்து இடிபாடுகளை அகற்றும் பணி நடக்கிறது. பழைய பாலம் சிறியதாக இருந்தாலும் ஆங்கிலேயேர் காலத்தில் கல் கட்டு மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதன் சில பகுதிகளை பொக்லைன் உதவியுடன் அகற்ற முடியவில்லை. இதையடுத்து வெடி வைத்து அகற்ற ஏற்பாடு செய்துள்ளனர். மழை இடையூறு இல்லாவிட்டால் 3 மாதங்களுக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இங்கு பாலம் 20 அடி அகலமாக உருவாக உள்ளதால் இதனை தொடர்த்து மாநகராட்சி இணைப்பு சாலை அமைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பாலம் பணி தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் கரையிருப்பு குறிச்சிகுளம் இடையே ரூ.50 லட்சத்தில் கால்வாய் பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Palayankkottai, Nellai, Bridge,Smal Bridge, Big Bridge
× RELATED முல்லைப் பெரியாறு அணை வழக்கு...