×

குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்காமல் சென்னை மக்கள் திண்டாடும் நேரத்தில் புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் சிட்கோ தொழில் மண்டலம்

* ஐகோர்ட் எச்சரித்தும் அரசு கண்டுகொள்ளவில்லை
* 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முடிவு
* பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: சென்னை மக்கள் கடுமையான வறட்சியில் சிக்கி குடிக்க தண்ணீருக்கு கூட தவித்து வரும் நேரத்தில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் 60 ஏக்கரை சிட்கோ தொழில் மண்டலத்திற்காக அரசு கையகப்படுத்த முடிவு செய்து வருவது பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கடந்த 4 மாதங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் தந்துவந்த புழல், செம்பரம்பாக்கம், பூண்டி போன்ற ஏரிகள் முற்றிலும் வறண்டுவிட்டன.குடிநீர் தட்டுப்பாட்டால் மக்களின் இயல்பு வாழ்வில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏரிகள் சரியான நேரத்தில், சரியான முறையில் தூர்வாரப்படாததும், நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததும்தான் காரணம் என்று பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை சென்னை உயர் நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறது.இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் 4500 ஏக்கர் பரந்து விரிந்துள்ள புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிறு தொழில் வளர்ச்சி கழகம் (சிட்கோ) 60 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது.

சிறு தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக சிட்கோ மண்டலத்தை அமைக்க அரசு திட்டமிட்டு அதன் அடிப்படையில் புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் நிலத்தை ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டால் ஏரிக்கு வரும் தண்ணீர் வரத்து தடைபட்டுவிடும். இதனால், புழல் ஏரி தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து வறண்டுவிடும் நிலை ஏற்பட்டுவிடும். ஆந்திராவிலிருந்து கிருஷ்ணா நதி தண்ணீர் வரும்போது ஏரிக்குள் தண்ணீர் வரத்துக்கு தடை ஏற்பட்டுவிடும். ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிதான் மிக முக்கியம். ஆனால், அந்த பகுதியையே அரசு தற்போது ஆர்ஜிதம் செய்துவருவது மக்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே, சென்னையின் பசுமை அழிந்து மழை அளவு குறைந்துவிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நீர்பிடிப்பு பகுதியை அரசே கையகப்படுத்தி வருவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று புழல் ஏரி அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிட்கோ மண்டலம் அமைக்க முடிவு எடுப்பதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சிட்கோ மண்டலம் அமைப்பதற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நீர்பிடிப்பு பகுதியை ஆர்ஜிதம் செய்திருப்பது நீர்வளத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அறப்போர் இயக்கத்தை சேர்ந்த டேவிட் மனோகர் தெரிவித்துள்ளார்.

புறம்போக்கு நிலத்தையோ, நீர் ஆதார பகுதிகளையோ வேறு பயனுக்கு மாற்றுவதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார்.ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் திருவள்ளூர் கலெக்டருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
நீர்நிலைகளை பாதுகாக்க தவறினால், முன்னோர் ஆறு குளம் ஏரிகளில் பார்த்த தண்ணீரை, எதிர்கால சந்ததியினர் குப்பியிலும் கேப்சூலிலும் தான் பார்க்க வேண்டிய அவலநிலை ஏற்படக் கூடும் என்று உயர் நீதிமன்றம் ஏற்கனவே வேதனை தெரிவித்துள்ளது.மக்கள் வரிப்பணத்தை இலவசங்கள் வழங்க பயன்படுத்துவதை விடுத்து மக்களுக்கு பயன்படும் வகையில் மாநிலம் முழுதும் கூடுதல் அணைகள் கட்டுவது குறித்து சிந்திக்க வேண்டும்.இயற்கையின் வர பிரசாதமான நீரை வீணாக்கினால், தென் ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள கேப் டவுன் நகருக்கு ஏற்பட்டதை போல தமிழகத்திலும் தண்ணீர் இல்லா நாள் வரப்போவது வெகு தூரத்தில் இல்லை என்றும் உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.  நீர் ஆதாரங்களை அழித்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது, நீர் ஆதாரத்தை அரசே காலி செய்ய முடிவு செய்திருப்பது மக்களிடையே கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் சென்னைக்கு குடிநீர் தரும் ஏரி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஆண்டு முழுவதும் வேறு மாவட்டங்களில் இருந்து ரயிலில்தான் தண்ணீர்கொண்டுவர வேண்டும். ஒருபுறம் நீர் ஆதாரத்தை பெருக்கவேண்டும், மழைநீர்சேமிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அமைச்சர்கள் ஏரியை அரசே ஆக்கிரமிப்பு செய்யும் வகையில் சிட்கோ மண்டலத்தை அமைப்பதில் முழு மூச்சில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் சென்னையின் குடிநீர் பஞ்சம் தொடர் பிரச்னையாகவே மாறிவிடும். ஏரிகள் தூர்வாருதல், நீர் ஆதாரங்களை அபகரித்துள்ள ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அவற்றை மீட்பது போன்ற வழக்குகளில் அரசுக்கு பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ள உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு புழல் ஏரி விவகாரமும் கொண்டு வரப்படும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் பேசப்படுகிறது.

Tags : Chitco Industry Zone
× RELATED 3 ஆண்டு கால எல்எல்பி படிப்பில் சேர...