×

பணபலம், அதிகார பலத்தை எதிர்கொண்டு வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது: ஸ்டாலின் பேட்டி

சென்னை: வேலூரில் கதிர் ஆனந்துக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்துள்ள வெற்றி என்று மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். பணபலம், அதிகார பலத்தை எதிர்கொண்டு வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வேலூர் மக்களவை தொகுதி வாக்காளர்களுக்கு இதயப்பூர்வமான நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தொகுதியில் கிடைத்த வெற்றி முழுமையான வெற்றி என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் கோட்டையை திமுகவின் வசமாக்கிய வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தாமதப்படுத்த முயற்சிக்கலாம் ஆனால் தடுக்க முடியாது என்பது போல திமுக வெற்றிப் பயணம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நான் உள்பட திமுகவின் அனைத்து களப்பணியாளர்களும் கடுமையாக உழைத்ததற்கு கிடைத்த வெற்றி இது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி புகைப்படங்களுக்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து அண்ணா, கலைஞர் படத்துக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் தேர்தல் முடிவுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரம் வெளியிட்டார். அதில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை கதிர் ஆனந்துக்கு மாவட்ட அதிகாரி வழங்கினார். வேலூர் தொகுதியை வென்றதன் மூலம் மக்களவையில் திமுக எம்.பி.க்கள் பலம் 24-ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிகள் 38 இடங்களில் வெற்றி பெற்றது. வேலூரிலும் வெற்றி பெற்றதை அடுத்து திமுக கூட்டணி 40-க்கு 39 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.

திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 48,5340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் 47,7199 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ்.தீபலட்சுமி 26,995 வாக்குகள் பெற்றனர்.

கதிர் ஆனந்த் பேட்டி:

வேலூரில் திமுக பெற்ற வெற்றியை ஸ்டாலினுக்கு காணிக்கையாக்குவதாக கத்தி ஆனந்த் கூறியுள்ளார். வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றிச் சான்றிதழை பெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.

Tags : Stalin, Vellore, DMK, Victory
× RELATED தமிழகத்தில் ரூ.4 கோடியில் மரபணு...