×

நாட்டிலேயே முதல் முறையாக கொல்கத்தாவில் நீருக்கு அடியில் ரயில் பாதை: மத்திய ரயில்வே அமைச்சர் பெருமிதம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் நீருக்கு அடியில் முதன் முதலாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் ஏற்கனவே மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு ஒரு பாதையில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இப்போது 2-வது பாதை அமைக்கப்படுகிறது. கொல்கத்தாவையும், ஹெளராவையும் இணைக்கும் வகையில், ஹுக்ளி ஆற்றுக்கு அடியில் 520 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகிறது. இந்த பாதை அங்குள்ள ஹுக்ளி ஆற்றை கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆறுகள் குறுக்கே வந்தால் மேம்பாலம் மூலம் பாதை அமைப்பது வழக்கம். ஆனால் ஹுக்ளி ஆற்றுக்கு கீழே சுரங்கம் அமைத்து பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு மொத்தம் 520 மீட்டர் தூரத்திற்கு சுரங்க பாதை அமைக்கும் பணி நடந்தது. ஆற்றுக்கு கீழே 30 மீட்டர் ஆழத்தில் இது அமைக்கப்பட்டது. ஆற்றில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு விடாமல் இருக்க 3 அடுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த பணி முற்றிலும் நிறைவு பெற்றுள்ளது.

மெட்ரோ ரயில் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்போது, இந்த சுரங்கப் பாதைகளை ஒரு நிமிடத்தில் கடந்து சென்று விட முடியும். சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் செல்லும் போது, பாதியில் அது நின்றுவிடும் பட்சத்தில், பயணிகளை மீட்பதற்காக பக்கவாட்டில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதன் வழியாக ரயிலை இயக்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் இந்த பாதையில் ரயில் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தியாவில் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வெற்றி பெற்றிருப்பது இந்திய ரயில்வே வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Kolkata, Metro Rail
× RELATED திண்டுக்கல்- பாலக்காடு இடையே தண்டவாள...