×

தடுப்பணைகள் கட்டுவதை தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தடுப்பணைகள் கட்டுவதையும், பராமரிப்பதையும் தமிழகத்தில் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஆந்திரத்தில் உருவாகி ஊத்துக்கோட்டை வழியாக தமிழகத்தில் நுழையும் ஆரணி ஆற்றின் குறுக்கே மொத்தம் 9 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் மிகப்பெரிய தடுப்பணை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த  பாலேஸ்வரம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
290 மீட்டர் அகலமும், 3.5 மீட்டர் உயரமும் கொண்ட அந்த தடுப்பணையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை அறிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை சார்பில் 2010ம் ஆண்டு முதல்  2013ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பணை மூலம் வியக்கத்தக்க பயன்கள் கிடைத்திருப்பது ஆய்வில் தெரிய வந்ததாக அண்ணா பல்கலை கூறியுள்ளது.

பாலேஸ்வரம் தடுப்பணை மூலம் அதைச்சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும்பட்சத்தில்  பருவமழை பொய்த்தாலும் கூட தடையின்றி உழவு செய்ய முடியும். தென் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக தடுப்பணைகள் கட்டப்படவில்லை. முதல்வர் அறிவித்த 10,000 தடுப்பணைகளுக்கான நிதி  ஒதுக்கீடு, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முடித்து கட்டுமான பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்டுவதும், அவற்றை பராமரிப்பதும் அவ்வளவு எளிதான பணியல்ல. மாநில அரசால் மட்டும் இவை அனைத்தையும் செய்து விட முடியாது. உள்ளாட்சி அமைப்புகள், உழவர் அமைப்புகள்  ஆகியவற்றின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.எனவே, தடுப்பணைகளை கட்டுவதையும், பராமரிப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் தடுப்பணைகள் கட்டுவதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இப்பணிகளை  ஒருங்கிணைப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றையும் அரசு அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Building, Tamil Nadu,movement,Ramadas emphasis
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்